×

தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களுக்கு ஆதரவாக எடியூரப்பாவின் ஆடியோவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம்: சித்தராமையா தகவல்

பெங்களூரு: ‘‘கர்நாடகாவில் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களுக்கு ஆதரவாக முதல்வர் எடியூரப்பா பேசிய ஆடியோவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம்’’ என அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூறினார்.கர்நாடக பாஜ சார்பில் இரு தினங்களுக்கு முன் தேர்தல் ஆலோசனை குழுக் கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இதில், முதல்வர் எடியூரப்பா கலந்துகொண்டு பேசுகையில், ‘‘கர்நாடகாவில் பாஜ ஆட்சி அமைய மஜத-காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்தனர். நாம் பதவிக்கு வர காரணமானவர்களை நாம் விட்டுவிடக்கூடாது. அவர்கள் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பொறுப்பில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டிருந்தனர்’’ எனக் கூறியிருந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

முதல்வர் எடியூரப்பா பேசிய ஆடியோ ஆதாரம் மற்றும் செய்தி வெளியான நாளிதழ்களின் நகல்களுடன் சித்தராமையா தலைமையில் காங்கிரசார் ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்து மனு கொடுத்தனர். அதில் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு புறம்பாக எடியூரப்பா நடந்து கொண்டுள்ளார்.
கூட்டணி ஆட்சியை கலைக்க மஜத-காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா ெசய்ய வைத்ததை அவரே ஆடியோ பேச்சில் குறிப்பிட்டுள்ளார். எனவே, அவர் பேசியதை ஆதாரமாக கொண்டு பாஜ ஆட்சியை கலைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனர். மேலும், கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்ததற்கு பாஜ தேசிய தலைவர் அமித்ஷாவும் ஒரு முக்கிய காரணமாக இருந்துள்ளார் என்றும் காங்கிரசார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.  இதனிடையே நேற்று முதல்வர் எடியூரப்பா அளித்த பேட்டியில், ‘‘விளம்பரத்திற்காகவே நாள்தோறும் மிகைப்படுத்தி சித்தராமையா கூறிவருகிறார்.

வழக்கறிஞராக இருக்கும் சித்தராமையாவுக்கு சட்ட அறிவு துளியும் இல்லை. சாதாரணமாக ஒரு மனிதனுக்கு இருக்க வேண்டிய அறிவு கூட இல்லாமல் அவர் பித்து பிடித்தவரை போல பேசி வருகிறார். தேர்தலை எதிர்கொள்வது குறித்து பாஜ நிர்வாகிகளுடன் நான் பேசியதை வைத்துக்கொண்டு அதை மிகைப்படுத்தி என் மீது தேவையற்ற குற்றச்சாட்டுகளை கூறிவருகிறார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட  எம்.எல்.ஏ.க்களுக்கு இடைத்தேர்தலில் டிக்கெட் கொடுப்பேன் என நான் எந்த  சூழ்நிலையிலும் கூறவில்லை’’ என்றார்.இதேபோல், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா அளித்த பேட்டியில், ‘‘முதல்வர் எடியூரப்பா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு ஆபரேசன் தாமரையில் நேரடி தொடர்பு இருக்கிறது. முதல்வர் எடியூரப்பாவின் ஆடியோவில் இது தெளிவாகிறது. மக்கள் ஆட்சி  படுகொலை செய்யப்பட்ட விஷயத்தை நாங்கள் எளிதாக விட்டுவிட மாட்டோம். உச்ச நீதிமன்றத்திற்கு இதை தெரிவிப்போம். காங்கிரஸ் சார்பில் வழக்கு ஆவணமாக தாக்கல் செய்வதற்கான நடவடிக்கையும் எடுத்து வருகிறோம்’’  என்றார்.

Tags : Siddaramaiah ,Yeddyurappa ,Supreme Court ,Disqualification MLAs , Yeddyurappa's , filed in Supreme Court , disqualification MLAs,Siddaramaiah
× RELATED வறட்சி நிவாரணத்தை உடனடியாக விடுவிக்க...