×

அரசியல் ரீதியான முயற்சிகளை எடுத்திருந்தால் அயோத்தி சம்பவத்தை தவிர்த்து இருக்க முடியும்: முன்னாள் உள்துறை செயலர் தகவல்

புதுடெல்லி: ‘அரசியல் ரீதியான முயற்சிகள் எடுக்கப்பட்டு இருந்தால், அயோத்தி விவகாரத்தில் நடந்த அசம்பாவிதத்தை தவிர்த்து இருக்கலாம்,’ என மத்திய முன்னாள் உள்துறை செயலாளர் மாதவ் காட்போலே கூறியுள்ளார்.உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் கடந்த 1992ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அந்த நேரத்தில் மத்திய உள்துறை செயலாளராக இருந்த மாதவ் காட்போலே எழுதிய ‘தி பாபர் மஜித்-ராம் மந்திர் டைலமா: அன் ஆசிட் டெஸ்ட் பார் இந்தியா கான்ஸ்டிடியூசன்’ என்ற புத்தகத்தில் அயோத்தி விவகாரம் குறித்து பல்வேறு சம்பவங்களை தொகுத்துள்ளார். புத்தகத்தில் அவர் கூறியிருப்பதாவது:பிரதமர்கள் மட்டத்தில் அரசியல் ரீதியாக முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்தால், பாபர் மசூதி அசம்பாவிதம் நிகழாமல் தவிர்த்திருக்கலாம். இந்த நெருக்கடியான டெஸ்ட் போட்டியில், ஒரு வீரராக அப்போதைய பிரதமரான நரசிம்மராவின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது. ஆனால், துரதிஷ்டவசமாக அவர்கள் விளையாடாத கேப்டனாகவே இருந்து விட்டார்.

பாபர் மசூதிக்கு பெரும் அச்சுறுத்தல் இருந்த சமயத்தில், முன்னாள் பிரதமர்களான ராஜிவ் காந்தி, வி.பி.சிங் ஆகியோர் கூட சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டனர். ராஜிவ் காந்தி பிரதமராக இருந்த போதே, இப்பிரச்னையை தீர்க்க பல்வேறு பரிந்துரைகள் வழங்கப்பட்டன. ஆனால், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.கடந்த 1992ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து அதிகாரிகள், அரசு அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி, விரிவான அவசர திட்டம் ஒன்றை வகுத்தது. அரசியலமைப்பு சட்டப்பிரிவு 356ன்படி, சர்ச்சைக்குரிய பகுதியை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான சட்டம் கொண்டு வர வேண்டுமென அதில் பரிந்துரைக்கப்பட்டது. அதற்கான சட்ட முன்வரைவுக்கும் சட்ட அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது.இந்த அவசர அறிக்கையானது, 1992 நவம்பர் 4ம் தேதி அமைச்சரவை செயலாளர், பிரதமரின் முதன்மை செயலாளர், பிரதமரின் மூத்த ஆலோசகர், உள்துறை அமைச்சகம் மற்றும் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதில், பாபர் மசூதி வளாகத்தில் துணை ராணுவத்தின் பாதுகாப்பு போடப்பட வேண்டும், கரசேவகர்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்க வேண்டும், மத்திய படைகள் பாதுகாப்புக்கு முன்பாக சட்டப்பிரிவு 356ன்படி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பரிந்துரைகள் வழங்கப்பட்டன.ஆனால், அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ் இத்திட்டத்தை நிராகரித்தார். அவர் முழு பொறுப்பையும் மாநில அரசிடம் ஒப்படைத்தார். கல்யாண் சிங் தலைமையிலான உபி அரசே இப்பிரச்னையை சுதந்திரமாக கையாளாமல் விட்டு விட்டார். எனவே, கரசேவகர்கள் சட்டத்தை அவர்கள் கையில் எடுத்துக் கொண்டு பாபர் மசூதியை இடித்ததில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. இந்த விஷயத்தில் அரசியலமைப்புபடியான பொறுப்புகளை நிறைவேற்ற மாநில அரசும், அப்போதைய கவர்னர் சத்ய நாராயணா ரெட்டியும் தவறி விட்டனர். ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டிய அவசியத்தை கவர்னர் வலியுறுத்த தவறிவிட்டார். இந்த விஷயத்தில் அரசியலமைப்பையும், அதன் மதிப்பையும் காப்பதில், அனைத்து அரசுகளும் தோல்வி அடைந்தன. அங்கிருந்த கட்டமைப்பை பாதுகாக்க மாநில அரசு தவறி விட்டது. இந்தியா தனது அரசியலமைப்பையே கேலிக் கூத்தாக்கிவிட்டது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags : incident ,Ayodhya , Ayodhya incident, avoided, political efforts, made,Former Home Secretary Information
× RELATED பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே...