×

அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதியளித்தபடி 17பி நடவடிக்கை ரத்தாகவில்லை 1000 டாக்டர்கள் அதிர்ச்சி: 70 மருத்துவர் பணி மாறுதல் நீடிப்பு

சென்னை: அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதியளித்தபடி 70 டாக்டர்கள் பணி மாறுதல், 1000 டாக்டர்கள் மீதான 17பி நடவடிக்கை தற்போது ரத்தாகவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து டாக்டர் சங்க கூட்டமைப்பினர் நாளை விஜயபாஸ்கரை  சந்தித்து இது தொடர்பாக முறையிடவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் 23 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், 32 மாவட்ட தலைமை மருத்துவமனைகள், 178 வட்ட மருத்துவமனைகள், 1,765 ஆரம்ப சுகாதார  நிலையங்கள், 134 நகர சுகாதார நிலையங்கள், 8,706 துணை சுகாதார நிலையங்கள், 416 நடமாடும் மருத்துவமனைகள் உள்ளன. இவற்றில் 18,070 டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர்.

2009ம் ஆண்டு டாக்டர்களின் ஊதிய விகிதம் தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணை 354ல் கூறியுள்ளபடி, ஊதிய உயர்வை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச  கோரிக்கைகளை வலியுறுத்தி 25ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம், சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். டாக்டர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தால் பல இடங்களில் அரசு  மருத்துவமனைகளில் சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் கடும் அவதிப்பட்டனர். சில இடங்களில் உரிய சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் இறந்த சம்பவங்களும் அரங்கேறியது. ஏற்கனவே பணிக்கு திரும்பாதவர்கள் மீது பணி முறிவு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் அதிகமான டாக்டர்கள் கடந்த 28ம் தேதி பணியிடமாற்றம்  செய்யப்பட்டனர்.

இதற்கு, டாக்டர்கள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள், அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இல்லையெனில் தங்களது போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்று அரசுக்கு  எச்சரிக்கை விடுத்தனர்.
 இந்த நிலையில், போராட்டத்தை கைவிட்டால், பேச்சுவார்த்தைக்கு தயார் என சுகாதாரத்துறை தரப்பில் தெரிவித்தனர். இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி போராட்டத்தை கைவிட்டால் பணி மாறுதல், டாக்டர்கள் மீதான 17 பி  பிரிவின் மீது நடவடிக்கை ரத்து செய்யப்படும் என்று அறிவித்தார். இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்கள் சங்கத்தினர் அவசர ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த கூட்டத்தில் போராட்டத்தை கைவிட முடிவு செய்தனர். இதனால், 8 நாட்களாக நீடித்து வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்ட அறிக்கையில்,‘‘ முதல்வரின் உத்தரவுப்படி, அரசால் அறிவிக்கப்பட்டிருந்த பிரேக் இன் சர்வீஸ் உத்தரவு திரும்ப பெறப்படுகிறது. ஏற்கனவே உறுதியளித்தபடி, அரசு  டாக்டர்களின் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலிக்கும்’’ என்று கூறியிருந்தார். அதைத்தொடர்ந்து பணியிடமாற்றம் செய்யப்பட்ட டாக்டர்கள் நீங்கலாக பிற டாக்டர்கள் பணிக்கு திரும்பினர். இந்த நிலையில்,  டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர்  சென்னை தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேசை சந்தித்தனர்.

அப்போது, போராட்டம் நடத்திய டாக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை திரும்ப  பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.  இதைத்தொடர்ந்து 4 அம்ச கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை டாக்டர்கள் கூட்டமைப்பினர் சுகாதாரத்துறை செயலாளரிடம் அளித்தனர். டாக்டர்கள் வழக்கம் போல் பணிக்கு செல்ல வேண்டும், ஒரு  வாரத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார். தொடர்ந்து, .  மருத்துவமனைகளில் டாக்டர்கள் பணிக்கு வந்ததால் இயல்புநிலை திரும்ப தொடங்கியது.
இந்த நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி அளித்தபடி 70 டாக்டர்கள் பணியிட மாற்றம், ஆயிரம் டாக்டர்கள் மீதான 17 பிரிவு மீதான நடவடிக்கை தற்போது வரை ரத்து செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்  டாக்டர்கள் சங்க கூட்டமைப்பினர் நாளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்து இது குறித்து முறையிடவுள்ளதாக கூறப்படுகிறது.



Tags : Minister ,Vijayabaskar 17B ,Minister Wijayabaskar , 17B action not canceled as promised by Minister Wijayabaskar
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...