பிரியங்கா காந்தியின் வாட்ஸ் அப் உளவு பார்க்கப்பட்டுள்ளது: காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா பகிரங்க குற்றச்சாட்டு

புதுடெல்லி: உலகம் முழுவதும் 150 கோடி பேர் வாட்ஸ் ஆப் பயன்படுத்துகின்றனர். இதில் இந்தியர்கள் 40 கோடி பேர். இந்நிலையில் இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ குரூப் என்ற கண்காணிப்பு நிறுவனம் உளவு மென்பொருளை பயன்படுத்தி 4  கண்டங்களைச் சேர்ந்த தூதர்கள், அரசியல் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், மூத்த அரசு அதிகாரிகள் என் 1400 பேரின் போன்களை ஹேக் செய்து கண்காணித்து பல நிறுவனங்களுக்கு தகவல் அளித்துள்ளது.  இதில் இந்தியர்களும் அடங்குவர்.

யாருடைய உத்தரவின் பேரில் இஸ்ரேல் நிறுவனம் இந்த உளவு நடவடிக்கையில் ஈடுபட்டது என தெரியவில்லை. இதை கடந்த மே மாதம் கண்டுபிடித்து தடுத்து நிறுத்திய வாட்ஸ் ஆப் நிறுவனம் என்எஸ்ஓ குழுமம் மீது கலிபோர்னியா  நீதிமன்றத்தில் கடந்த செவ்வாய் கிழமை வழக்கு தொடர்ந்துள்ளது. இந்தியாவில் யாருடைய போன் எண்கள் கண்காணிக்கப்பட்டது என்ற விவரத்தை வாட்ஸ் அப் வெளியிடவில்லை.

உளவு குற்றச்சாட்டை மறுத்துள்ள என்எஸ்ஓ நிறுவனம், ‘‘தீவிரவாதம் மற்றும் கடுமையான குற்றங்களை எதிரான நடவடிக்கையில் உதவ அரசு உளவு நிறுவனங்கள் மற்றும் புலனாய்வு அமைப்புகளுக்கு மட்டுமே இந்த உளவு தொழில்நுட்ப  சேவையை வழங்கினோம்’’ என கூறியுள்ளது. இந்த உளவு நடவடிக்கை தொடர்பாக விரிவான பதில் அளிக்கும்படி வாட்ஸ் அப் நிறுவனத்தை மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டது. தொடர்ந்து, இந்தியாவில்  பத்திரிக்கையாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்களின் வாட்ஸ் அப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்ட விவகாரத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் விளக்கம் அளித்தது.

அதன்படி, உளவு பார்க்கப்பட்ட தகவலை கடந்த மே மாதமே மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டது என தெரிவித்தது. மேலும், இந்திய கணினி தாக்குதல் தடுப்பு அமைப்பான சி.இ.ஆர்.டி யிடம் உளவு பார்த்த தகவலை வாட்ஸ் அப் நிறுவனம்  கூறியது. ஆனால் பெகாசுஸ் என்ற மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதையோ, எந்த வகையில் தகவல்கள் திருடப்பட்டன என்பது பற்றியோ அதில் கூறவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள வாட்ஸ் அப்  நிறுவனம் தனி நபர்களுக்கு வரும் தகவல்களை பாதுகாப்பதற்கே முன்னுரிமை தருவோம் என உறுதி அளித்தது.

இது தொடர்பாக, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘பாஜ.வோ அல்லது மத்திய அரசோ, இஸ்ரேல் நிறுவனம் வாட்ஸ் அப் தகவல்களை திருட உதவி இருந்தால் அது மிகப்பெரிய மனித உரிமை  மீறலாகும். இது தேச பாதுகாப்பில் நடந்த ஊழலாகவும் கருதப்படும். மத்திய அரசு தனது விளக்கத்தை வெளியிட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் வாட்ஸ்அப் உளவு பார்க்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். வாட்ஸ் அப்  உளவு பார்த்தது தொடர்பாக பிரியங்கா காந்திக்கு எச்சரிக்கை வந்துள்ளதாகவும் ரந்தீப் சுர்ஜேவாலா புகார் தெரிவித்தார். மேலும், மத்திய பாஜக அரசு தான் வாட்ஸ் அப்பை உளவு பார்த்ததாகவும் ரந்தீப் சுர்ஜேவாலா பகிரங்கமாக  குற்றம்சாட்டியுள்ளது.

Related Stories:

>