×

பருவ மழை கைகொடுத்ததால் 3 மாதமாக குறையாத அமராவதி அணை நீர்மட்டம்: 74 அடியாக நீடிப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

உடுமலை:  அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்ட போது அணையின் நீர்மட்டம் கடந்த 3 மாதமாக 70 அடிக்கு குறையாமல் இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை  அருகே அமைந்துள்ளது அமராவதி அணை. 90 அடி  கொள்ளளவு கொண்ட இந்த அணையில் கடந்த 3 மாதமாக 70 அடிக்கு கீழ் குறையாமல் தண்ணீர் இருந்து வருவது விவசாயிகளிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர்,  கரூர் மாவட்ட விளை நிலங்களுக்கு தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதோடு, அமராவதி ஆற்றின் கரையோரம் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதாகவும் இந்த அணை அமைந்துள்ளது. நடப்பாண்டில்  தென்மேற்கு பருவமழை சற்றே தாமதமாக துவங்கியபோதும் அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் சீராக மழை பெய்ததால் அணையின் நீர்மட்டம் கடந்த ஆகஸ்ட் மாதமே 70 அடியை தொட்டது.

தொடர்ந்து பருவமழை தீவிரமடையவே செப்டம்பர் மாத இறுதியில் அணையின் நீர்மட்டம் 85 அடியாக உயர்ந்தது. இதையடுத்து விவசாயிகள் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும்படி அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். விவசாயிகளின்  கோரிக்கையை ஏற்று கடந்த செப்டம்பர் 30ம் தேதி அமராவதி அணையில் இருந்து ஆறு மற்றும் பிரதான கால்வாய் வழியாக திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் திருப்பூர்  மாவட்டத்தை சேர்ந்த 7520 ஏக்கர் பாசன பகுதிகளுக்கு குறுவை சாகுபடிக்காகவும், அமராவதி பழைய ராஜ வாய்க்கால் வழியாக திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 20,176 ஏக்கர் பாசன பகுதிகளுக்கும், அமராவதி அணை பிரதான  கால்வாய்  வழியாக 25,250 ஏக்கர் பாசன பகுதிகளுக்கும் குறித்த இடைவெளி விட்டு தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தீவிரமடையவே அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1500 முதல் 1800 கன அடி வரை அதிகரித்தது. இதன் காரணமாக விவசாயத்திற்காக ஒரு பக்கம் தண்ணீர் திறந்து விடப்பட்டாலும்  அணைக்கு நீர் வரத்து ஓரளவிற்கு கணிசமாக இருந்த காரணத்தால் அணையின் நீர்மட்டம் 75 அடியாக தொடர்ந்தது. கடந்த 28ம் தேதி அணைக்கு வினாடிக்கு 1495 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து பாசனத்திற்காக  459 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதேபோல கடந்த 31ம் தேதி அணைக்கு 1038 கன அடி நீர் வரத்து இருந்தது. அணையில் இருந்து 605 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அக்டோபர் மாத இறுதியில் அணையின் நீர்மட்டம் 73 அடியாக  நீடித்தது.

நேற்று மாலை நிலவரப்படி அணைக்கு 660 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 507 கன அடி பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 74.35 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து பாசனத்திற்காக  கணிசமான அளவு தண்ணீர் திறக்கப்பட்ட போதும், பருவமழை கைகொடுத்த காரணத்தால் ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் ஆகிய 3 மாதங்களில் அணையில் இருந்து 10 அடி தண்ணீரே குறைந்துள்ளது. இதன் காரணமாக கோடை காலத்தில்  குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என்றும், குறுவை சாகுபடிக்கு அணையில் இருந்து தேவைப்படும் காலத்தில் உயிர் தண்ணீர் திறந்து விட்டால் கூட குடிநீர் தட்டுப்பாடு ஏற்பாடு என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.


Tags : Amaravathi Dam , Amaravathi Dam: Water levels of 74 feet remain unchanged
× RELATED அரவக்குறிச்சி பகுதியில் அமராவதி அணை திறப்பால் விவசாய பணிகள் மும்முரம்