×

நாகூர் அருகே மணல்மேடு பகுதியில் குடியிருப்புகளை சுற்றி கழிவுநீர் ஓடும் அவலம்: கொசுத்தொல்லை துர்நாற்றத்தால் மக்கள் அவதி

நாகை: நாகூர் அருகே மணல் மேடு பகுதியில் கழிவு நீர் வழிந்தோடும் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கின்றனர். நாகை மாவட்டம் நாகூர் அருகே மணல்மேடு பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல ஆண்டு காலமாக வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் தினக்கூலி தொழிலாளர்களாக வேலை செய்து அன்றாடம் வருமானத்தைக்கொண்டு பிழைப்பு நடத்துகின்றனர். தங்களுக்கு என்று பாதுகாப்பான ஒரு வீட்டை கூட கட்டிக்கொள்ள முடியாமல் குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்கள் வசிப்பிடங்களை சுற்றி கழிவு நீர் மட்டுமே செல்கிறது. இதனால் இங்கு வசிக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொற்றுநோய் பிடியில் தான் இருக்கிறார்கள்.

நவீன அறிவியல் யுகத்தில் இருந்தும் மணல்மேடு பகுதியில் கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்து தான் செல்வதை பார்க்கும் போது பொதுமக்கள் மிகவும் அதிர்ச்சி அடைகின்றனர். ஆனால் அதிகாரிகள் இதை ஒரு பொருட்டாக எடுத்து கொள்வது இல்லை. இதற்கு மத்தியில் கடந்த ஒரு வாரகாலமாக நாகையில் கனமழை பெய்தது. இதனால் கழிவு நீருடன் மழை நீர் தேங்கி அங்கிருந்து வெளியேற முடியாமல் அப்படியே தேங்கியுள்ளது. கழிவு நீர் செல்லும் பாதை முற்றிலுமாக அடைபட்டுள்ளது. இதன் காரணமாக மழைநீர் மற்றும் கழிவு நீர் வெளியேற வழியில்லாமல் வீடுகளுக்குள் புகுந்து விட்டதாக அப்பகுதி பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

தொடர்ந்து துர்நாற்றத்தால் வீட்டில் தங்க முடியவில்லை. இரவு நேரங்களில் கொசு தொல்லையால் தூக்கத்தை தொலைக்க வேண்டியுள்ளதால் அப்பகுதி பொது மக்கள் நலன் கருதி நகராட்சி அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் மணல்மேடு பகுதியில் கூலித்தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்புகளை சுற்றி தேங்கிகிடக்கும் கழிவுநீரை அகற்றி தொற்றுநோய் பரவாமல் தடுக்க வேண்டுமென கோரி்க்கை விடுத்துள்ளனர்.

Tags : Nagore ,dwellings ,areas , Nagore, sand dune, sewer
× RELATED படகில் சென்று மீன் பிடித்தபோது...