×

நெற்பயிர்களுக்கு களையெடுப்புக்கு பின் தெளிக்க உரத்தட்டுப்பாடு: வேதாரண்யம் விவசாயிகள் கவலை

வேதாரண்யம்:வேதாரண்யம் தாலுகா பகுதியில் தற்போது நெற்பயிர்களை எடுக்கும் பணிகள் நடைபெற்று வரும் வேளையில் உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். வேதாரண்யம் தாலுகா பகுதிகளில் மேட்டூர்அணை நீர், மழைநீரை நம்பி ஆற்றுப்பாசனம், மானாவாரி வயல்களில் நேரடிநெல் விதைப்பு நடைபெற்று தற்போது பயிர்கள் முளைத்து களையெடுக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. களையெடுத்து பயிர் வளர்ச்சிக்காக யூரியா உரம் வயல்களுக்கு தெளிக்கும் பருவத்தில் விவசாயிகள் யூரிய உரம் தட்டுப்பாட்டால் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். வேதாரண்யம், தலைஞாயிறு பகுதிகளில் ஆண்டுதோறும் சுமார் 25 ஆயிரம் எக்டேரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு தலைஞாயிறு பகுதியில் ஆற்றுப்பாசனத்தை நம்பி வயல்களில் நேரடிநெல் விதைப்புபணிகள் 75 சதவீதம் நடைபெற்றது. மீதம் உள்ள 25 சதவீதம் நடவுப்பணியும் நடைபெற்று தற்போது வயல்களில் களையெடுக்கும் பணி நடைபெறுகிறது. வேதாரண்யம் பகுதியில் தன் பாசன மூலம் சாகுபடி செய்யப்படும் பிராந்தியங்கரை, மூலக்கரை, மணக்காடு, வடமழை உள்ளிட்ட பகுதிகளிலும் கடைமடை பாசனபகுதியான தலைஞாயிறு, அரிச்சந்திராநதி தாணிக்கோட்டகம், முள்ளியாறு ஆகிய பகுதிகளிலும் களையெடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவமழை பெய்த நிலையில் நெல் சாகுபடியில் களையெடுக்கும் பணிநடைபெற்று வருகிறது. களையெடுத்த பின்பு வயல்களில் யூரியாஉரம் தெளிப்பதற்கு யூரியா கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.

இந்நிலையில் மருதூர் தெற்கு தொடக்கவேளாண்மை கூட்டுறவு வங்கியில் 225 விவசாயிகளுக்கு 20 டன் யூரியாவும், கத்தரிப்புலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 10 டன் யூரியாவும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இருந்த போதிலும் போதுமானஅளவு யூரியாஉரம் கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்தனர். இது குறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகள் கூறும்போது, இன்னும் ஓரிரு நாளில் முழு அளவில் யூரியா வந்துவிடும் என்றும், தட்டுப்பாடு இல்லாமல் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

Tags : Fertilizer spraying ,Vedaranyam ,weeding , Paddy, Vedaranyam farmers, concern
× RELATED வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள்...