×

நெல்லையில் 4 வழிச்சாலை பணிக்காக வேருடன் அகற்றி வேறு இடத்தில் நடப்பட்ட மரங்கள் துளிர்த்தன: சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மகிழ்ச்சி

நெல்லை: நெல்லையில் 4 வழிச்சாலை பணிக்காக  வேருடன் அகற்றி மாற்று இடத்தில் நடப்பட்ட மரங்கள், துளிர்க்க தொடங்கியுள்ளன. இதனால் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நெல்லை மாநகர பகுதியில் அதிகரித்துவரும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பல்வேறு சாலைகள், 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பாளை. மத்திய சிறை அருகில் இருந்து டக்கரம்மாள்புரம் வரையுள்ள சாலையும், தச்சநல்லூரில் இருந்து தாழையூத்து வரையிலான சாலையும் ரூ.37 கோடி மதிப்பீட்டில் 4 வழிச்சாலையாக மாற்றும் பணி நடந்து வருகின்றன. இந்த இரு சாலைகளின் மொத்த நீளம் 8.9 கிமீ ஆகும். இதிலுள்ள சிறிய பாலங்கள் மற்றும் கல்வெட்டு பாலங்களும் அகலப்படுத்தப்படுகின்றன.

சாலையின் மைய பகுதியில் நிரந்தர சென்டர் மீடியன் மற்றும் மின்விளக்குகளும் அமைக்கப்பட உள்ளன. சாலையை கடக்கும் சந்திப்புகளில் சிக்னல்களும் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. சாலை விரிவாக்கப்பணி பெரும்பாலும் முடிந்த நிலையில் சிறிய பாலங்கள் அகலப்படுத்தும் பணி நடந்து வருகின்றன. தச்சநல்லூர்- தாழையூத்து இடையே சாலையை அகலப்படுத்தும்போது அங்கிருந்த அரசமரம், புங்கை, வேம்பு, ஆலமரம் உள்ளிட்டவற்றை வேருடன் அகற்றி கிரேன் மூலம் எடுத்துச் சென்றனர். அவற்றை ராஜவல்லிபுரம் குளக்கரை பகுதியில் வேரோடு நட்டனர். மேலும் சில கிளைகளை வெட்டி சுமார் 200 மரக்கன்றுகளாகவும் பல்வேறு இடங்களில் நடப்பட்டது. இதனை சமூக ஆர்வலர்கள், நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறையினர் பராமரித்து வருகின்றனர்.

மாற்று இடத்தில் நடப்பட்ட மரங்களிலும், மரக்கிளைகளிலும் தற்போது இலைகள் துளிர்க்க தொடங்கியுள்ளன. சாலை பணிக்காக அகற்றப்பட்ட மரங்கள் தொடர்ந்து உயிர்ப்புடன் இருப்பதால் மர ஆர்வலர்களும், பொதுமக்களும் மகிழ்ச்சி
அடைந்துள்ளனர்.

Tags : community activists ,Paddy ,paddy field ,elsewhere , Paddy, trees pierced
× RELATED அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை...