×

கோபி அருகே கிராமத்திற்குள் குப்பை கொட்டுவதை கண்டித்து சாலை மறியல்: பேரூராட்சி நிர்வாகத்துக்கு எதிராக போராட்டம்

கோபி: கோபி அருகே கிராமத்திற்குள் பேரூராட்சி குப்பை மற்றும் கழிவுகள் கொட்டுவதால்  சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள வாணிபுத்தூர் பேரூராட்சி 9வது வார்டுக்குட்பட்ட பள்ளத்தூர் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் வழியாக குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து உபரி நீர் வெளியேறும் பள்ளம் உள்ளது. தற்போது உபரி நீர் வெளியேறி வரும் நிலையில், பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பை மற்றும் கழிவுகளை பேரூராட்சி நிர்வாகம் பள்ளத்தூரில் உள்ள பள்ளத்திலேயே கொட்டி வருகிறது.

இதனால் கடுமையான சுகாதார கேடு ஏற்பட்டு, கடந்த சில நாட்களாக அப்பகுதியில் மாணவ, மாணவிகள், குழந்தைகள் உட்பட பலரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தங்கள் பகுதியில் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பையை கொட்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் பேரூராட்சி நிர்வாகம் தொடர்ந்து குப்பையை கொட்டி வரவே ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று வாணிபுத்தூரில் இருந்து கள்ளியங்காடு செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த பங்களாபுதூர் போலீசார், மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதை ஏற்க மறுத்த கிராம மக்கள் பேரூராட்சி அதிகாரிகள் வந்தால் மட்டுமே போராட்டத்தை கைவிட முடியும் என கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து, அங்கு வந்த பேரூராட்சி அதிகாரிகள் உடனடியாக குப்பையை அகற்றுவதுடன், இனி குப்பை கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags : protest ,village ,panchayat administration ,Gopi , Kofi, garbage into the village, picket road
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...