×

கஜா புயலின்போது நிலச்சரிவால் சேதம் கொடைக்கானலுக்கு திக்...திக்... பயணம்

* ஓராண்டாகியும் சீரமைக்கப்படாத துயரம்
* உயிர்பலிக்கு முன் பணிகள் துவங்குமா?

கொடைக்கானல்:  கஜா புயலின்போது நிலச்சரிவு ஏற்பட்ட கொடைக்கானல் - வத்தலக்குண்டு மலைச்சாலையில், தற்காலிக மண் மூட்டைகளை அடுக்கி வைத்தே போக்குவரத்து நடந்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கஜா புயல் கோரதாண்டவம் ஆடி ஓராண்டாகி விட்டது. இப்புயலின்போது ஆயிரக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும் 100க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமாயின. குறிப்பாக, கொடைக்கானல் - வத்தலக்குண்டு சாலையில் பெருமாள் மலையை அடுத்த குருசடி அருகில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டது. பின்னர் பல நாட்கள் கழித்து மண் மூட்டைகள் அடுக்கப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்பட்டது. தற்காலிகமாக அமைக்கப்பட்ட இச்சாலை வழியாகத்தான் தற்போது வரை போக்குவரத்து நடந்து வருகிறது.

இப்பகுதியில் கனரக வாகனங்கள் கடக்கும்போதெல்லாம் சாலையில் அதிர்வு ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே கடந்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடைக்கானலில் கனமழை கொட்டி தீர்த்தது. இதில் இந்த தற்காலிக சாலை சேதம் அடைந்தது. இது வாகன ஓட்டிகளிடையே  அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் நெடுஞ்சாலைத்துறை இந்த ஆபத்தை உணர்ந்ததாக தெரியவில்லை. சேதமடைந்த தற்காலிக சாலையில் தொடர்ந்து வாகனங்கள் சென்று வந்தால் மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்படுவதுடன், கொடைக்கானல் - வத்தலக்குண்டு சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்படும் நிலை உள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறையினர் போர்க்கால அடிப்படையில் இங்கு நிரந்தர சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘‘கொடைக்கானலில் கஜா புயல் பாதிப்பு ஏற்பட்டு இந்த மாதத்தோடு ஓராண்டு நிறைவடைந்து விட்டது. ஆனால் இதுவரை குருசடி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவை தற்காலிகமாக மண் மூட்டைகளை மட்டும் வைத்து சரிசெய்துள்ளனர்.  சில நாட்களுக்கு முன்பு கொடைக்கானலில் கொட்டி தீர்த்த மழையால் இந்த தற்காலிக அமைப்பு சேதமடைந்துள்ளது. எனவே உயிர்ப்பலி நடக்கும் முன்பு நெடுஞ்சாலைத்துறையினர். வலுவான சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் செந்திலிடம் கேட்டபோது, ‘‘நிலச்சரிவு ஏற்பட்ட குருசடி பகுதியில் ₹40 லட்சம் செலவில் சுவர் அமைக்கப்பட உள்ளது. இப்பணி விரைவில் துவங்கப்படும்’’ என்றார்.

Tags : landslide ,Kaja Storm Kaja Storm , Khaja Storm, Damage
× RELATED நீலகிரி மாவட்டம் உதகை அருகே கட்டுமானப்பணியின் போது மண் சரிந்து விபத்து