×

வேலூர் சிறையில் 16வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் முருகன் திடீர் மயக்கம்: நேரில் சந்தித்த வக்கீல் தகவல்

வேலூர்: வேலூர் சிறையில் 16வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் முருகன் மயக்கமடைந்தாக நேரில் சந்தித்த வக்கீல் தெரிவித்தார். ராஜிவ் கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் முருகனும், பெண்கள் சிறையில் அவரது மனைவி நளினியும் அடைக்கப்பட்டுள்ளனர். முருகன் அறையில் செல்போன் சிக்கியதால் அவருக்கான சலுகைகளை சிறைத்துறை  ரத்து செய்தது. இந்நிலையில், முருகனை சிறை நிர்வாகம் கொடுமைப்படுத்துவதாக கூறி நளினி, 8வது நாளாக நேற்று உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.  அதேபோல் தன்னை தனியறையில் அடைத்து கொடுமைப்படுத்துவதாக கூறி முருகனும் 16வது நாளாக நேற்று உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

இந்நிலையில், அவரது வக்கீல் புகழேந்தி நேற்று, நளினி, முருகன் இருவரையும் சந்தித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: உண்ணாவிரதம் இருந்து வரும் முருகன், நேற்று முன்தினம் உடல்சோர்வுடன் காணப்பட்டார். அன்று மாலை மயக்கம் போட்டு விழுந்துவிட்டார். தள்ளாடியபடியே என்னை வந்து சந்தித்தார். டாக்டர்களும் முருகனை பரிசோதிக்கவில்லை. முருகன் உண்ணாவிரதத்தை கைவிட்டால், மட்டுமே நளினி உண்ணாவிரதத்தை கைவிடுவார். 2 பேரும் தனிமை சிறையில் உள்ளனர். இவர்களின் உயிருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தனிமை சிறையில் இருந்து இருவரையும் அரசு விடுவிக்க வேண்டும். செல்போன் பறிமுதல் வழக்கில் முருகனே வாதாட உள்ளார் என்றார்.

Tags : Murukan ,jail ,Vellore ,Vellore Jail , Vellore Prison, Murugan, Faint
× RELATED பாவங்களில் இருந்து விடுவட நரசிம்மர் விரத வழிபாடு முறை