×

உயர் அதிகாரிகளுக்கு தரவேண்டும் என்று குடிசை மாற்று வாரிய ஊழியர் லஞ்சம் வாங்கும் வீடியோ: வாட்ஸ் அப்பில் வைரல்

திருப்பூர்: திருப்பூரில், வீடு கட்டும் திட்டத்திற்காக மெக்கானிக் ஒருவரிடம், உயர் அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டும் என்று குடிசை மாற்று வாரிய ஊழியர் ₹50 ஆயிரம் லஞ்சம் வாங்கும் வீடியோ வாட்ஸ்-அப்பில் வைரலாகி உள்ளது.
திருப்பூரில் குடிசை மாற்று வாரிய அலுவலகம் மூலம் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கு திருப்பூர் காலேஜ் ரோடு பகுதியை சேர்ந்த பைக் மெக்கானிக் சக்திவேல் (45) விண்ணப்பித்து இருந்தார். அவருக்கு ரூ2 லட்சத்து 10 ஆயிரம் மானியம் கிடைத்தது.

அதன்படி 3 தவணைகளில் ரூ1 லட்சத்து 50 ஆயிரம் சக்திவேலுக்கு வழங்கப்பட்டிருந்தது. கடைசி தவணையாக ரூ60 ஆயிரம் கடந்த சில நாளுக்கு முன்பு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் குடிசை மாற்று வாரியத்தில் தற்காலிக தொழில்நுட்ப உதவியாளரான முருகன் (38) என்பவர் சக்திவேலிடம், உயர் அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டும் என ரூ50 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக தெரிகிறது. அவ்வாறு, முருகனிடம் பணம் கொடுப்பதை சக்திவேல் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிஉள்ளது.

இதுகுறித்து குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் கூறும்போது, முருகன் ஒப்பந்த ஊழியர் என்பதால் கடந்த தீபாவளிக்கு முன்பு அவர் வேலையை விட்டு நிறுத்தப்பட்டார். பணியில் இருந்து விலகிய பின்பு இவ்வாறு செய்தாரா? என தெரியவில்லை. எனவே, லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளோம் என்றனர். ஆனால், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் புகார் எதுவும் வரவில்லை எனக்கூறினார்கள்.

Tags : executives ,Cottage replacement board employee , High official, bribery
× RELATED பாமக நிர்வாகிகள் 50 பேர் திமுகவில் இணைந்தனர்