தண்டராம்பட்டு, வேலூரில் பரிதாபம் டெங்குவுக்கு சிறுமி, மணப்பெண் பலி

தண்டராம்பட்டு: தண்டராம்பட்டு மற்றும் வேலூரில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த  சிறுமி, மணப்பெண் ஆகியோர் பலியாகினர். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த தானிப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(30), கூலித்தொழிலாளி. இவரது மனைவி கல்பனா (29). இவர்களது மகன் அன்புமணி(4), மகள் மோனிஷா(3). கடந்த 29ம் தேதி சிறுமி மோனிஷாவுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக தானிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக  திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு ரத்த பரிசோதனையில் மோனிஷாவுககு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து தொடர் சிகிச்சை அளித்தனர். இந்நிலையில், மோனிஷா சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தாள். இதற்கிடையில், சிறுமி மோனிஷா வசித்த தெருவில் 4க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, தானிப்பாடி மற்றும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து தானிப்பாடி சுகாதார நிலைய மருத்துவக்குழுவினர் வீடுவீடாக சென்று பரிசோதனை செய்து டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இதேபோல், சித்தூர் மாவட்டம், பாலசமுத்திரம் மண்டலம், நரசிம்மபுரம் பஞ்சாயத்து டி.என்.ஆர்.புரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணம் ராஜூ மகள் சந்திரகலா(எ) காவ்யா(18). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் கடந்த 30ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக காவ்யாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அவரை வேலூர் மாவட்டம் சோளிங்கர் அரசு மருததுவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு பரிசோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இருப்பினும்  நிச்சயித்த தேதியில் திருமணம் நடத்த உறவினர்கள் முடிவு செய்தனர்.

ஆனால் இதற்கு அரசு டாக்டர்கள் அனுமதிக்கவில்லை. இதையடுத்து திருமணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி காவ்யா உயிரிழந்தார். திருமணமாகி கணவருடன் செல்லவேண்டிய மகள், டெங்குவுக்கு பலியாகி சுடுகாட்டுக்கு செல்கிறாரே எனக்கூறி பெற்றோர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

Related Stories: