×

திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா கோலாகலம் சூரபத்மனை சம்ஹாரம் செய்தார் ஜெயந்திநாதர்: லட்சக்கணக்கான பக்தர்கள் விண்ணதிர அரோகரா கோஷம்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று மாலை நடந்தது. கடற்கரையில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்களின் பக்தி கோஷம் விண்ணதிர சூரபத்மனை ஜெயந்தி நாதர் சம்ஹாரம் செய்தார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழா, கடந்த  28ம் தேதி தொடங்கியது. இதைமுன்னிட்டு கோயில் வளாகம் மற்றும் விடுதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்தனர். 6ம் நாளான நேற்று சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலை பூஜைக்கு எழுந்தருளினார். 7.30 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்கியது.

பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. உச்சிகால பூஜை முடிந்ததும் யாகசாலையில் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி தங்கசப்பரத்தில் எழுந்தருளி சண்முகவிலாசம் மண்டபம் சேர்ந்தார். அங்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.  பின்னர் சூரசம்ஹாரத்திற்காக மாலை  4.35 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரைக்கு எழுந்தருளினார். முதலில் 5.10 மணிக்கு கஜமுகனையும்,  5.28 மணிக்கு சிங்கமுகனையும், அடுத்து  5.45 மணிக்கு சூரபத்மனையும்,  6.05மணிக்கு மாமரம் மற்றும் சேவலையும் ஜெயந்திநாதர் சம்ஹாரம் செய்தார். சேவலை கொடியாகவும், மாமரத்தை மயிலாக மாற்றி தனது வாகனமாகவும் ஏற்றார். அப்போது கடற்கரையில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என விண்ணதிர கோஷம் எழுப்பினர். பின்னர் பக்தர்கள் கடலில் நீராடி விரதத்தை முடித்தனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, உதயகுமார், சேவூர் ராமச்சந்திரன், ராஜேந்திரபாலாஜி, டிஜிபி திரிபாதி, எம்எல்ஏக்கள் சண்முகநாதன், சின்னப்பன், ரெட்டியார்பட்டி நாராயணன், சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஆதிகேசவலு, மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுந்தர், புகழேந்தி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். சூரசம்ஹாரத்துக்கு பின்னர் சுவாமி சந்தோஷ மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இரவு 9 மணிக்கு சுவாமி 108 மகாமண்டபம் சேர்ந்தார். அங்கு யாகசாலை பூஜையில் வைக்கப்பட்ட வெள்ளி, செம்பு யந்திர தகடுகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. இன்று காலை 5.15 மணிக்கு கோயிலில் இருந்து தெய்வானை அம்பாள் தபசு காட்சிக்கு எழுந்தருளுகிறார். மாலையில் சுவாமி அம்மனுக்கு காட்சி கொடுத்து தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.

இரவில் கோயிலில் சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் உற்சவம் நடைபெறுகிறது. சூரசம்ஹாரத்தையொட்டி பல்வேறு பகுதிகளிலிருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நெல்லையில் இருந்து கூடுதலாக சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன. எல்இடி திரையில் ஒளிபரப்பு: லட்சக்கணக்கான  பக்தர்கள் திரண்டிருந்ததால் கோயில் நிர்வாகம் சார்பில் 7 இடங்களில் எல்இடி திரை மூலம் சூரசம்ஹார நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.

Tags : festival ,Thiruchendur ,ceremony ,Surabadman ,Millions ,Curapatmanai ,Tiruchendur kantacasti ,devotees , Thiruchendur, Kandasasti Festival,
× RELATED பள்ளிகள் விடுமுறையையொட்டி...