×

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானுக்கு அனுப்ப இந்தியாவில் ஆன்லைனில் தீவிரவாதிகள் சேர்ப்பு: அமெரிக்க அறிக்கையில் தகவல்

வாஷிங்டன்: வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தி தீவிரவாதிகள் தேர்வு செய்யப்படுவதற்கு இந்தியா கவலை கொண்டுள்ளதாக அமெரிக்காவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் போன்றோர்களின் வாட்ஸ் அப் தகவல்களை இஸ்ரேல் நிறுவனம் உளவுபார்த்து அதை பல்வேறு நிறுவனங்களுக்கு விற்றுள்ளதை வாட்ஸ் அப் கண்டுபிடித்துள்ளது. இது தொடர்பான செய்தி சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில், கடந்த 2018ம் ஆண்டுக்கான தீவிரவாத அறிக்கையை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது.

அதில் இந்தியா பற்றி கூறப்பட்டுள்ளதாவது: வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்கள் மற்றும் செய்தி ஆப்கள் முலம் தீவிரவாத இயக்கங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதற்கு இந்திய அதிகாரிகள் தனது கவலையை தெரிவித்துள்ளனர். ஆன்லைனில் தீவிரவாதிகள் தேர்வு செய்யப்படுவதை தடுப்பது தொடர்பாக இந்திய உள்துறை செயலாளர் மற்றும் அந்த துறையின் அதிகாரிகளும் சர்வதேச சமூகவலைதள நிறுவனத்தின் பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இருப்பினும், ஆன்லைன் மூலம் தீவிரவாத இயக்கங்களுக்கு ஆட்கள் தேர்வு ெசய்யப்பட்டு ஆப்கானிஸ்தானில் உள்ள ஐஎஸ் இயக்கத்துக்கு அனுப்பப்படுகின்றனர்.

பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்படும் தீவிரவாத அமைப்புகள், பழங்குடியினர், மாவோயிஸ்ட்கள், இந்தியா மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். காஷ்மீரில் எல்லை தாண்டி வந்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனாலும், எல்லையில் இந்தியா தொடர்ந்து தீவிரவாதிகள் கண்டறிதல், அவர்களை ஒழித்தல், தீவிரவாத அமைப்புகளை சிதைத்தல் போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த 2018ம் ஆண்டில் தீவிரவாதத்துக்கு எதிராக தீவிர ஒத்துழைப்பை கோருதல் மற்றும் அமெரிக்காவுடன் தீவிரவாத தகவல்களை இந்தியா பகிர்ந்தும் கொண்டுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டில்  காஷ்மீர் மாநிலம் தீவிரவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும், மத்திய இந்தியாவில் மாவோயிஸ்ட் இயக்கம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து, இவற்றை இந்தியா கண்டறிந்து அதை ஒழிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டிவருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  



Tags : militants ,India ,Afghanistan ,Pakistan ,US , Recruitment of militants in Afghanistan, Pakistan, India and online
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...