×

பாகிஸ்தானில் யாரும் குழப்பத்தை விளைவிக்க அனுமதிக்க முடியாது: எதிர்க்கட்சிகளுக்கு ராணுவம் எச்சரிக்கை

இஸ்லாமாபாத்: ‘பாகிஸ்தானில் யாரும் நிலையற்ற தன்மை, குழப்பத்தை உருவாக்க அனுமதிக்க முடியாது,’ என்று பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக பேரணி நடத்திய எதிர்க்கட்சிகளுக்கு ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தானில் கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் மோசடி செய்து ஆட்சிக்கு வந்ததாக கூறி பிரதமர் இம்ரான்கானை பதவி விலக எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இது தவிர நாட்டில் நிலவும் பணவீக்கம் உள்ளிட்ட பிரச்னையை கண்டித்து பேரணி நடத்திய எதிர்க்கட்சியினர், பிரதமர் இம்ரான்கான் 2 நாட்களில் பதவி விலகவும் கெடு விதித்தனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சிந்து மாகாணத்தில் இருந்து கடந்த 27ம் தேதி புறப்பட்ட எதிர்க்கட்சிகள் பேரணி, நேற்று முன்தினம் தலைநகர் இஸ்லாமாபாத்தை வந்தடைந்தது.

இந்த பேரணியில் ஜமாத் உலாமா இ இஸ்லாம் பாசல் கட்சியின் தலைவர் மவுலானா பஷ்லுர் ரஹ்மானின் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்கட்சியினர் லட்சக்கணக்கில் பங்கேற்றனர். இஸ்லாமாபாத்தில் நடந்த பேரணி பொதுக்கூட்டத்தில் நேற்று முன்தினம் ரஹ்மான் பேசுகையில், ‘`பிரதமர் இம்ரான்கான் 2 நாட்களில் பதவி விலக வேண்டும். பாகிஸ்தான் நாட்டின் கர்பச்சேவாக திகழும் இம்ரான்கான், அமைதியாக போராடும் எங்களின் பொறுமையை சோதிக்காமல் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். நமது அரசு நிறுவனங்களில் குழப்பம் ஏற்படுத்துவதை நாம் விரும்பவில்லை,’’ என்றார். ரஹ்மானின் இந்த கருத்துக்கு ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர் நேற்று அளித்த பதிலில், ‘‘மூத்த அரசியல்வாதியான ரஹ்மான் எந்த நிறுவனத்தை பற்றி பேசினார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

பாகிஸ்தான் ராணுவம் நடுநிலை தவறாதது. நாட்டில் ஸ்திரத்தன்மை இல்லாத நிலையை உருவாக்க யாரையும் அனுமதிக்க முடியாது. மேலும், இங்கு யாரும் குழப்பத்தையும் ஏற்படுத்த முடியாது’’ என்றார். இது பற்றி எதிர்க்கட்சி தலைவர்களுடனான ஆலோசனைக்கு பின் ரஹ்மான் அளித்த பேட்டியில், ‘`ராணுவத்தின் நடுநிலைத்தன்மையை மீறும் வகையில் பேட்டி அளிப்பதை ராணுவ செய்தி தொடர்பாளர் தவிர்க்க வேண்டும். இத்தகைய கருத்து அரசியல்வாதிகளிடம் இருந்து வரலாமே தவிர ராணுவத்திடம் இருந்து வரக்கூடாது,’’ என்றார்.

Tags : No one ,Pakistan ,Army ,opposition parties ,Chaos: Army , Pakistan, Opposition, Army Warning
× RELATED உலகின் உயரமான போர்க்களம் சியாச்சின்...