×

ஆசியான் மாநாட்டில் பங்கேற்க மூன்று நாள் பயணமாக தாய்லாந்து சென்றார் மோடி: திருக்குறள் ‘தாய்’ மொழிபெயர்ப்பு வெளியீடு

புதுடெல்லி: ஆசியான் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று தாய்லாந்து தலைநகர் பாங்காக் புறப்பட்டு சென்றார். தாய்லாந்தின் ‘தாய்’ மொழியில் எழுதப்பட்ட திருக்குறளை அவர் வெளியிடுகிறார். தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் 16வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாடு இன்று நடக்கிறது. நாளை 14வது கிழக்கு ஆசியா மாநாடு மற்றும் 3வது பிராந்திய பொருளாதார மாநாடு நடக்கிறது. இதில் இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் 10 தென்கிழக்கு ஆசிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

 இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று பாங்காக் புறப்பட்டு சென்றார். தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓ சாவை  சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் மோடி, அவர் அளிக்கும் சிறப்பு விருந்திலும் கலந்து கொள்கிறார். இந்திய வம்சாவளியினரையும் அவர் சந்தித்து உரையாற்றினார். அப்போது அவர், ‘‘இந்தியா-தாய்லாந்து இடையேயான உறவு மிகவும் வலுவானது. வடகிழக்கு மாநிலங்களை, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் நுழைவு வாயிலாக மாற்றுவதன் மூலம் இரு நாடுகள் இடையேயான உறவு மேலும் வலுப்பெறும். இந்தியா-மியான்மர்-தாய்லாந்து இடையே நெடுஞ்சாலை திறக்கப்படும்போது, இரு நாடுகள் இடையே இணைப்பு அதிகரிக்கும்’’ என்றார்.

திருக்குறளின் தாய்லாந்து மொழி  பெயர்ப்பையும் பிரதமர் மோடி வெளியிட்டார். ‘‘தாளாற்றி தந்த பொருளெல்லாம் தர்க்கார்க்கு வேளாண்மை செய்தல் பொருட்டு’’ என்ற திருக்குறளை தமிழில் வாசித்து அதற்கான அர்த்தம் ‘‘ஒருவர் தன் உழைப்பால் சேர்த்த பொருளெல்லாம் தகுதி உடையவர்களுக்கு உதவி செய்வதற்கே’’ என விளக்கினார். தாய்லாந்து பயணத்தை முன்னிட்டு பிரதமர் மோடி அளித்த பேட்டியில் கூறியதாவது: பாங்காக்கில் நடைபெறும் மாநாடுகளில் கலந்து கொள்ள வரும் உலக நாடுகளின் தலைவர்களை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன். இந்த மாநாடுகளுக்கு இடையில், ஆசிய நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

பிராந்திய பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில்(ஆர்சிஇபி) ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் இந்தியா ஆலோசிக்கும். வர்த்தகம், முதலீடு ஆகியவற்றில் இந்திய நலன்கள் குறித்தும் நாங்கள் ஆலோசிப்போம். ஆர்சிஇபி அனைத்து உறுப்பு நாடுகளும் பயன்பெறும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும். இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி மற்றும் செழிப்பை ஏற்படுத்துவதில் ஆசியான் நாடுகளின் அணுகுமுறை குறித்து ஆலோசிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Thailand ,Modi , ASEAN Conference, Thailand, Modi
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...