கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்தேக்க திட்டப்பணிகள் 80% நிறைவு: தமிழக அரசு தலைமை செயலாளர் தகவல்

சென்னை: கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்தேக்க பணிகளில் 80 சதவீதம் முடிந்துவிட்டது. மார்ச் மாதம் அது முழுமையாக பயன்பாட்டுக்கு வரும் என்று தமிழக அரசு தலைமை செயலாளர் சண்முகம் கூறினார். திருவள்ளுர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கண்ணன்கோட்டை பகுதியில் சென்னைக்கு 1 டிஎம்சி தண்ணீர் தேக்கி கொண்டு செல்லும் வகையில் நீர்தேக்க திட்டம் அரசால் 2013ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதற்காக கண்ணன்கோட்டை, விவசாய நிலம் உள்ளிட்ட 1485 ஏக்கர் நிலங்கள் அரசால் கையகப்படுத்தப்பட்டு  சுமார் 380 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றது. இதற்கிடையில் விவசாய நிலங்கள் கொடுத்த விவசாயிகளுக்கு 4 மடங்கு சந்தை மதிப்பில் இழப்பீடு மற்றும் மறுவாழ்வு குறித்த கோரிக்கைகளை பொதுமக்கள் ஏற்கனவே அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

ஆனால் அரசு நில மதிப்பீடு தொகையை மட்டுமே கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஒரு சில பேர் நீதிமன்றங்களை நாடி தங்கள் கோரிக்கையை வெளிப்படுத்தினர். அதையெல்லாம் ஓரளவுக்கு சரி செய்து கண்ணன்கோட்டை நீர்தேக்க திட்டபணிகள் மீண்டும் ஒரு சில மாதங்களுக்கு முன்பு துவக்கப்பட்டது.  இதனை ஒட்டி அனைத்து துறை அதிகாரிகளும்  அதற்கான பணியை துவக்கினர். அதே நேரம் உச்ச நீதிமன்றம் தெரிவித்தபடி உரிய இழப்பீட்டை காலதாமதம் செய்யாமல் நிலங்களை இழந்தவர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அதனை தொடர்ந்து நேற்று தமிழ்நாடு அரசு தலைமை செயலாளர் சண்முகம்  ஆய்வு செய்தார். ஆய்வின்போது திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், பொதுப்பணித்துறை  அதிகாரிகளான மணிவாசன், ராமமூர்த்தி, அசோகன் முத்தையா, கண்ணன்கோட்டை  நீர்தேக்க செயற்பொறியாளர் பழனிச்சாமி, உதவிபொறியாளர் தனசேகர், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் சுரேஷ்பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.  பின்பு கண்ணன்கோட்டை நீர்த்தேக்கம் வரைபடத்தையும்  அதோடு நீர்த்தேக்கத்தின் நுழைவு வாயில்  அணை கட்டப்பட்டுள்ள இடம், உபரிநீர் வெளியேறும் இடம், சேமிக்கப்பட்ட நீர் மெட்ரோ  குடிநீர் வாரிய குழாய்கள் மூலம் கொண்டு செல்லும் இடத்தை தலைமை செயலாளர் சண்முகம் அவர்களுக்கு காண்பித்து செயற்பொறியாளர் பழனிச்சாமி விளக்கினார்.

Related Stories: