×

ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ஓரின சேர்க்கை ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரியை கொன்ற வாலிபரின் தண்டனை குறைப்பு: உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சென்னை: வேலை வாங்கி தருவதாக கூறி, ஓரினச்சேர்க்கைக்கு பயன்படுத்திய ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரியை அடித்துக் கொன்ற வாலிபருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை 8 ஆண்டுகள் சிறைத் தண்டனையாக குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ஓரினச்சேர்க்கைக்கு பயன்படுத்தி மோசடி செய்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி விஸ்வநாதனை, தனபால் என்ற இளைஞர் இரும்பு தடியால் அடித்து கொலை செய்தார். கடந்த 2014ல் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி தனபாலை கைது ெசய்தனர். அவர் மீது கொலை வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இந்த வழக்கு ஈரோடு கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் தனபாலுக்கு ஆயுள் தண்டனையும், ₹1000 அபராதமும் விதித்து 2016 செப்டம்பர் 29ம் தேதி தீர்ப்பளித்தார். அமர்வு நீதிமன்றத்தின் இந்த தண்டனையை ரத்து செய்ய கோரி தனபால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.எம்.டி.டீக்காராமன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் வக்கீல் ஆர்.சி.பால்கனகராஜ் ஆஜராகி வாதிடும்போது, இறந்துபோன விஸ்வநாதன் ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாக தனபாலிடம் ஆசைவார்த்தை கூறியுள்ளார். அதை நம்பி அவரை சந்திக்க சென்ற தனபாலுக்கு மதுபானம் கொடுத்து தவறான பாலுறவு வைத்துள்ளார். ஒருகட்டத்தில், தான் ஏமாற்றப்பட்டது தனபாலுக்கு தெரிந்துள்ளது. சம்பவம் நடந்த நாளில் விஸ்வநாதன் தனது வீட்டுக்கு தனபாலை அழைத்துள்ளார். அங்கு சென்ற தனபாலை ஓரினச் சேர்க்கைக்கு அழைத்துள்ளார். அப்போது, தனபால் ஏன் இதுவரை வேலை வாங்கித் தராமல் ஏமாற்றுகிறீர்கள் என்று சத்தம் போட்டுள்ளார். அப்போது, இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் விஸ்வநாதன் இறந்துள்ளார். கொலை செய்யும் நோக்கம் தனபாலுக்கு இல்லை. இதை விசாரணை நீதிமன்றம் கவனிக்கத் தவறிவிட்டது என்று வாதிட்டார்.அரசுத் தரப்பில் வக்கீல் கே.பிரபாகர் ஆஜராகி, குற்றச்சாட்டு போதிய சாட்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதால் மேல் முறையீட்டை தள்ளுபடி செய்யவேண்டும் என்று வாதிட்டார்.

 இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அளித்த உத்தரவு வருமாறு: இந்த வழக்கு நேரடி சாட்சிகள் ஏதுமில்லாமல் சந்தர்ப்ப  சூழ்நிலைகளின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.குற்றவாளி தனபால் தனக்கு வேலை வாங்கி தராத ஆத்திரத்தில் விஸ்வநாதனை தாக்கியுள்ளார். விஸ்வநாதனை கொலை செய்யும் நோக்கில் தாக்கவில்லை.  ஏற்கனவே, விஸ்வநாதனின் ஆசைக்கு இணங்கியிருந்தாலும், சம்பவம் நடந்த அன்று அவருக்கு விஸ்வநாதனின் செயல் பிடிக்கவில்லை. அதனால்தான் தனபால் தாக்கியுள்ளார். திடீரென ஏற்பட்ட தூண்டுதலால் அவர் இந்த குற்றத்தை செய்துள்ளார்.   எனவே, இது கொலை குற்றமாகாது. பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் இதை தெளிவுபடுத்தியுள்ளது. எனவே, தனபாலுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை இந்த நீதிமன்றம் 8 ஆண்டுகளாக குறைக்கிறது. அவர் ஏற்கனவே அனுபவித்த சிறைத் தண்டனை போக மீதமுள்ள தண்டனை நாட்களை அனுபவிக்கும் வகையில் ஜாமீனில் உள்ள தனபாலை கைது செய்வதற்கான வாரன்ட் ஈரோடு அமர்வு நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : Supreme Court ,retiree ,naval officer ,army , Supreme Court,dilates sentence,youth, killed , retiree
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...