×

பாடி மேம்பாலத்தில் அதிகாலை விபத்து கன்டெய்னர் லாரி மீது அரசு பஸ் மோதி கண்டக்டர் பலி: 18 பேர் படுகாயம்

சென்னை: பாடி மேம்பாலத்தில் கன்டெய்னர் லாரி மீது அரசு பஸ் மோதியதில் கண்டக்டர் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த 18 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. சென்னை பாடி மேம்பாலத்தில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் கன்டெய்னர் லாரி ஒன்று பாடி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து கோயம்பேடு நோக்கி சென்ற அரசு பஸ், திடீரென கன்டெய்னர் லாரி மீது வேகமாக மோதியது. இதில் பஸ்சின் முன்பகுதி நொறுங்கியதில், கண்டக்டர் சென்னை செங்குன்றத்தை சேர்ந்த வீரமுத்து (42) பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்டு தலை மற்றும் நெஞ்சில் பலத்த காயம் அடைந்தார். டிரைவர் கோவிந்தசாமி (53) பஸ்சின் இடிபாடுகளில் சிக்கியதில் கால்கள் முறிந்து படுகாயம் அடைந்தார்.

மேலும், பஸ்சில் பயணம் செய்த சூளைமேடு பகுதியை சேர்ந்த ஜெகநாதன் (31), நெல்லூரை சேர்ந்த கிஷ் (23), சந்திரசேகர் (30), வெங்கடேஷ் (48), கிருஷ்ணம்மாள் (54), ஜானி (25) மற்றும் செங்குன்றத்தை சேர்ந்த அருள்தாஸ் (57), லிங்கய்யா (60), கும்மிடிப்பூண்டியை சேர்ந்த சுரேஷ் (30), தேவகி (55), சீனிவாசன் (57), பல்லாவரத்தை சேர்ந்த தேவி (48) உள்பட 18 பேர் படுகாயம் அடைந்து கூச்சலிட்டனர். விபத்தை பார்த்து அப்பகுதியில் மக்கள் திரண்டதால் பாடி மேம்பாலத்தில் பரபரப்பு நிலவியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதுபற்றி தகவல் கிடைத்ததும் திருமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில் கண்டக்டர் வீரமுத்து பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : government bus crashes , 18 killed, 18 injured.government bus , container truck
× RELATED ஆந்திர மாநிலம் கடப்பா அருகே கார் மீது...