×

மாநகராட்சிகளில் இணைந்த ஊராட்சி செயலர்கள் பதிவு எழுத்தராக நியமனம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளின் எல்லைகள் நிர்வாக வசதி கருதி விரிவாக்கம் செய்யும்போது புதிதாக இணைக்கப்படும் ஊராட்சிகளில் பணியாற்றும் ஊழியர்கள் சம்பந்தப்பட்ட மாநகராட்சி மற்றும் நகராட்சி பணியாளர்களாக சேர்த்து கொள்ளப்படுவார்கள்.
இந்த நிலையில் சமீபத்தில் எல்லை விரிவாக்கம் செய்யப்பட்ட மதுரை, திருச்சி உள்ளிட்ட 5 மாநகராட்சிகள் மற்றும் திருப்பத்தூர், காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட 8 நகராட்சிகளுடன் இணைக்கப்பட்ட 25 கிராமங்களைச் சேர்ந்த ஊராட்சி செயலாளர்கள் அந்தந்த நகராட்சி, மாநகராட்சிகளில் அதே ஊதிய விகிதத்தில் பணியமர்த்தப்பட்டனர். ஆனால், அவர்களுக்கான முறையான பணியிடம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

இதை தொடர்ந்து அந்த ஊராட்சி செயலாளர்கள் தங்களை மாநகராட்சியின் வருவாய் உதவியாளர் மற்றும் முதல் இளநிலை உதவியளராக நியமிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனு மீது 12 மாதங்களில் உரிய முடிவை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இதன்படி திருப்பத்தூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கரூர், நாமக்கல், புதுக்கோட்டை மாநகராட்சிகள் மற்றும், ஓசூர் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சியில் இணைந்த ஊராட்சிகளில் பணியாற்றிய 25 ஊராட்சி செயலாளர்களை சம்பந்தப்பட்ட மாநகராட்சியின் பதிவு எழுத்தராக பணி நியமனம் செய்து தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் ஹர்மந்தர் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags : Registrar ,Tamil Nadu ,Panchayat Secretaries ,Municipalities , Appointment ,Panchayat Secretaries attached, Municipalities, Government Order, Tamil Nadu
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...