×

டெல்லி கோர்ட்டில் போலீஸ் - வக்கீல்கள் மோதல் வாகனங்களுக்கு தீ: துப்பாக்கிச்சூடு: பார்க்கிங் விவகாரத்தில் விபரீதம்

புதுடெல்லி: டெல்லி நீதிமன்றத்தில் போலீசாரும், வக்கீல்களும் நேற்று  கடுமையாக மோதிக் கொண்டனர். இதில், போலீஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டன.டெல்லியில் உள்ள தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில்  நின்றிருந்த சிறைத் துறை வாகனத்தின் மீது வக்கீல் ஒருவர் சென்ற கார் லேசாக  உரசியது. இதை  சிறைத்துறை வாகன டிரைவராக இருந்த போலீஸ்காரர், வக்கீலிடம் தட்டிக் கேட்டுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.  அந்த வக்கீலை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்து் சென்று, சரமாரியாக அடித்து நொறுக்கினர். இதில் அவர்  படுகாயம் அடைந்தார். இந்த தகவல் வக்கீல்களுக்கு தெரிந்ததும், வக்கீலை வெளியே அனுப்பும்படி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், போலீசார் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.

அதனால்  ஆத்திரம் அடைந்த வக்கீல்கள், நீதிமன்ற வளாகத்தில் நின்றிருந்த போலீஸ் வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதில், 8 வாகனங்கள் சேதமடைந்தன. மேலும், ஒரு வாகனத்துக்கு தீ வைத்தனர். உடனே, போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். வக்கீல்களுக்கும், போலீசாருக்கும் பெரிய மோதல் வெடித்தது. இதனால், நீதிமன்ற வளாகமே போர்க்களம் போல் மாறியது.போலீசார் நடவடிக்கையை கண்டித்து வக்கீல்கள் போராட்டமும், நீதிமன்ற புறக்கணிப்பும் செய்தனர்.இந்த சம்பவம் பற்றி தீஸ் ஹசாரி வக்கீல்கள் சங்க செயலாளர் ஜெய்வீர் சிங் சவுகான் கூறுகையில், ‘‘கைது செய்யப்பட்ட வக்கீலை விடுவிக்கும்படி, மத்திய  மற்றும் வடக்கு மாவட்ட நீதிபதிகளுடன் மேலும் 6 நீதிபதிகள் கூறியும் போலீசார் மறுத்து விட்டனர். வக்கீல்களை நோக்கி போலீசார் 4 முறை துப்பாக்கியால் சுட்டனர். இதில், ரஞ்சித் சிங் மாலிக் எனும் வக்கீலை  தோட்டா துளைத்தது. அவர் படுகாயத்துடன்  மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், சில வக்கீல்களும் காயம் அடைந்தனர். போலீசின் இந்த அராஜகத்தை கண்டித்து டெல்லியின் அனைத்து மாவட்டங்களிலும் 4ம்  தேதி (நாளை) நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடைபெறும்,’’ என்றார்.

Tags : Delhi ,Collision ,police - lawyers fire ,lawyers ,court fires , Delhi court fires on police and lawyers for collision of vehicles
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...