×

எல்ஐசி காப்பீடு பிரீமியத்திற்கான 18 சதவீ ஜிஎஸ்டியை திரும்ப பெற வேண்டும்: கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

சென்னை: எல்ஐசி பிரீமியத்திற்கு விதிக்கப்பட்டிருக்கும் 18 சதவீத ஜிஎஸ்டி வரியை திரும்ப பெற வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை : இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் 1956ம் ஆண்டில் ₹ 5 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டு இன்றைக்கு ₹30 லட்சம் கோடி முதலீடு உள்ள நிறுவனமாக வளர்ந்துள்ளது. தேசியமயமாக்கப்பட்ட போது மொத்த ஆயுள் நிதி ₹ 440 கோடியிலிருந்து ₹ 31 லட்சத்து 11 ஆயிரம் கோடியாக வளர்ந்துள்ளது. அதேபோல, 55 லட்சமாக இருந்த பாலிசிதாரர்களின் எண்ணிக்கை இன்று 30 கோடியாக உயர்ந்துள்ளது.இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பொதுமக்களால் நம்பிக்கையோடு செய்யப்படுகிற முதலீடுகள் இந்தியாவின் வளர்ச்சிக்கு பெருமளவில் உதவி செய்து வருகின்றன. இந்திய மக்களின் வாழ்வாதாரத்தோடு சம்மந்தப்பட்ட, இந்தியாவின் வளர்ச்சியில் தம்மை முழுமையாக இணைத்துக் கொண்ட இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பினால் கடுமையான சோதனைக்கு உள்ளாகி வருகிறது.

பாலிசிதாரர்களின் பிரீமிய தொகை மீது முதலில் சேவைக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. பிறகு, மத்திய பாஜக ஆட்சியில் தற்போது பிரீமியத் தொகை மீது 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுகிறது. உயிர்க் காப்பீட்டுத் திட்டங்களுக்காக பொதுமக்கள் செய்கிற முதலீட்டிற்கான பிரீமியத் தொகை மீது ஜிஎஸ்டி வரி விதிப்பது எந்த வகையில் நியாயம் என்பதை நரேந்திர மோடி அரசு தான் விளக்க வேண்டும்.அதேநேரத்தில், தங்கத்திற்கு 3 சதவீதம், வைரத்திற்கு 0.25 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கிற மத்திய பாஜக அரசு, தங்களது உயிருக்கு உத்தரவாதம் தருகிற வகையில் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் முதலீடு செய்யப்படுகிற தொகைகளுக்கான பிரீமியத்திற்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்பது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பாலிசிதாரர்களின் முதலீடு குறைந்து ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே, எவ்வித நியாயமும் இல்லாமல் பிரீமியத்திற்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

Tags : KS Alagiri , 18% GST, withdrawal, LIC insurance ,premium, KS Alagiri
× RELATED 6 மாதமாக ஜிஎஸ்டி தாக்கல் செய்யாத 5.43 லட்சம் நிறுவன பதிவு ரத்தாகிறது