×

இந்த பூமி குழந்தைகளுக்குபாதுகாப்பானதாக இருக்கிறதா?: போர்வெல் மரணங்கள் சொல்லாமல் சொல்லும் சேதி...

என்ன தான் நடந்தது? திருச்சி நகரிலிருந்து 47 கிமீ தொலைவில் மணப்பாறை அருகில் உள்ளது நடுக்காட்டுபட்டி. இந்த ஊரைச் சேர்ந்த விவசாயி பிரிட்டோ ஆரோக்கியராஜ். இவரது மனைவி கலாராணி. இவர்களுக்கு புனித் ரோஷன் (4), சுஜித் வில்சன் (2) என்ற இரு மகன்கள். இவர்களில் சுஜித் கடந்த அக்.25ல் தோட்டத்தில் உள்ள ஆழ்துறை கிணற்றில் விழுந்தான்.இதைப் பார்த்து அவனது தாய் கலாமேரி கதறித் துடிக்க, அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். இதன் பின் தீயணைப்புத்துறை துவங்கி தேசிய பேரிடர் மீட்பு படை வரை 82 மணி நேரமாக போராடினர்.குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த செய்தி அறிந்த தன்னார்வ குழுக்கள் இரவோடு, இரவாக வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மத்திய, மாநில அரசுகளின் மாநிலப் பேரிடர் மீட்புப் படை, தேசிய பேரிடர் மீட்புப்படையினர் 16 மணிநேரம் கழித்து தான் சம்பவ இடத்திற்கே வந்தனர். அப்படி வந்தவர்களின் நவீனக்கருவிகள் இருந்தனவா? ஏனெனில், இந்திய ராணுவத்துக்காக 2019-20ம் ஆண்டு பட்ஜெட்டில் 3.18 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கிய மத்திய அரசு, தன் வசம் உள்ள தேசிய பேரிடர் மேலாண்மைத் துறை, தேசிய பேரிடர் மீட்புப் படை  ஆகியவற்றிற்கு எத்தனை கோடி நிதி ஒதுக்கியுள்ளது என்ற கேள்வி, சுஜித் மீட்பின் தோல்வியில் இருந்து கேட்கத் தோன்றுகிறது.

கேள்வி எழுப்பும் டிவிட்: “நிலவில் நீர், செவ்வாயில் குடியிருப்பு, எதற்காக இத்துணைக் கண்டுபிடிப்புகள்? நூறு அடியில் உயிரொன்று ஊசலாடுகையில் விஞ்ஞானமும் நாமும் எதற்கு? சுஜித் பூமி தாய் வயிற்றில் கருவாகி இருக்கிறாய். பிரசவ வலி அந்த தாய்க்கு பதில் உனக்கு. பொறுத்துக்கொள் சாமி. விழித்துக்கொள் தேசமே..” என்று கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் டுவிட்டர் பக்கத்தில் கோபமாக வெளியிட்ட கருத்து, சமூகத்தின் முன் சில கேள்விகளை முன் வைத்துள்ளது.பூமிக்கடியில் இருந்து தான் நீர், நிலக்கரி, தங்கம், பெட்ரோல் உள்ளிட்ட அத்தனை பொருட்களும் கிடைக்கிறது. பூமிக்கு அடியில் சுமார் 1,500 அடியிலிருந்து 2 ஆயிரம் அடி வரை ஆழத்தில் உள்ள மீத்தேன் வாயுவை கண்டுபிடிக்க முடிந்த விஞ்ஞானத்திற்கு, 20 அடி ஆழத்தில் விழுந்த சிறுவனை மீட்பதற்கான வழியில்லாமல் போய் விட்டது.மலக்குழி மரணங்கள்: பூமிக்கு அடியில் போர்வெல் குழியில் சிக்கி இறப்பவர்களைப் போலவே மலக்குழியில் சிக்கி இறப்பவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் தான் அதிகம். மலக்குழிக்குள் மனிதர்கள் இறங்கும் அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் சட்டம் இயற்றி 6 ஆண்டுகளாகியும் இதுவரை அமலாகவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளில் மலக்குழியை சுத்தம் செய்யும் போது 88 தொழிலாளர்கள் இறந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 1993ம் ஆண்டில் இருந்து தற்போது வரை பதிவான துப்புரவு தொழிலாளர்கள் பலி எண்ணிக்கையில் தமிழகம் தான் முதலிடம். இதுவரை பதிவாகி உள்ள 620 மரணங்களில் 144 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.

அதிகரிக்கும் ஆழ்துளை கிணறுகள்: எப்படியாவது விவசாயம் செய்து விட வேண்டும் என்ற வேட்கையில் ஆழ்குழாய்கள் மூலம் நீரைத்தேடும் வேலையில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர். தமிழகத்தில் 2006ம் ஆண்டு 14 லட்சமாக இருந்த ஆழ்துளை கிணறுகளின் எண்ணிக்கை, 2019ம் ஆண்டு 39 லட்சமாக உயர்ந்து விட்டது. இந்தியாவில் ஆழ்துளையில் சிக்கி உயிரிழக்கும் குழந்தைகளில் 92 சதவீதம் பேர் பத்து வயதிற்குட்பட்டவர்கள் என்று தேசிய பேரிடர் மீட்புப் படையின் அறிக்கை கூறுகிறது. இதையடுத்து ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கவும், பராமரிக்கவும் இந்தியா முழுவதும் விதிமுறைகள் வகுக்கப்பட்டன. அனுமதியின்றி ஆழ்துளைக் கிணறுகளைத் தோண்டினால் சட்டப்பிரிவு 143 (ஏ), 143 (பி)ன் படி 50 ஆயிரம் ரூபாய் அபராதம், மூன்று முதல் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை என்று சட்டம் நிறைவேற்றப்பட்டு, தமிழ்நாடு ஆழ்துளைக் கிணறுகள் ஒழுங்காற்று விதி 2015 என்ற பெயரில் 18.2.2015 அன்று அரசாணையும் வெளியிடப்பட்டது. ஏழு ஆண்டுகள் தண்டனை பெற்றவர்களின் எண்ணிக்கையை தமிழக அரசு வெளியிடத் தயாராக இருக்கிறதா? ஏனெனில்  இந்த சட்டம் இயற்றப்பட்ட பின் குழிக்குள் விழுந்து இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம்.

போர்வெல் பூதம் விழுங்கியவர்கள்: சென்னை மண்ணடி ஆடியபாதம் தெருவைச் சேர்ந்த 5 வயது சிறுவன் தமிழ்மணி, காஞ்சிபுரம் மாவட்டம் பாலுச்செட்டிசத்திரம் தைப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுவன் ராம்குமார்,  மதுரை மாவட்டம் ஆண்டிபட்டி ராஜதானி கிராமத்தை சேர்ந்த 6 வயது சிறுவன் மாயி இருளன், திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பட்டு அண்டம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த 3 வயது சிறுவன் கோபிநாத், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி கைலாசநாதபுரத்தை சேர்ந்த 5 வயது சிறுவன் சுதர்சன், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை மந்தையூரைச் சேர்ந்த 2 வயது சிறுவன் குணா, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே சூரிபாளி இனங்கனூரைச் சேர்ந்த 7 வயது சிறுமி முத்துலட்சுமி, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி புலவன்பாடியைச் சேர்ந்த 4 வயது சிறுமி தேவி, விழுப்புரம் மாவட்டம் பல்லகச்சேரி காட்டுக்கொட்டகையைச் சேர்ந்த 3 வயது சிறுமி மதுமிதா, திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே கிடாம்பாளையத்தைச் சேர்ந்த 2 வயது சிறுவன் சுஜித், வேலூர் மாவட்டம் கூராம்பாடியைச் சேர்ந்த 2 வயது சிறுவன் தமிழ்செல்வன் என போர்வெல் குழியில் விழுந்து உயிரிழந்தவர்களின் பட்டியல் அதிகம்.
தற்போது சுஜித் மரணத்தையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் அரசை நோக்கி நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். அதை கேள்வியைத்தான் தமிழக அரசை நோக்கி சமூகம் கேட்கிறது. ‘‘போர்வெல் மரணங்கள் மீது தமிழக அரசு இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன?’’

மீண்டு வந்த குழந்தைகள்
ஆழ்துளை கிணறுக்குள் விழுந்த உயிருடன் குழந்தைகள் மீட்கப்பட்ட சம்பவம் அரிதாகவே நடக்கிறது. திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே குத்தாலப்பேரியில் ஹர்ஷன் என்ற 3 வயது சிறுவன் 2014, ஏப். 14ம் தேதி 18 அடி ஆழமுள்ள குழியில் தவறி விழுந்தான். ஆறு மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டான். திருவள்ளுவர் மாவட்டம், திருத்தணி முருகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விஜய என்ற 2 வயது சிறுமி 6 ஆடி ஆழத்தில் விழுந்தார். அவரை கிராமமக்கள் உயிருடன் காப்பாற்றினர். நாகப்பட்டினம் மாவட்டம், புதுப்பள்ளியை சேர்ந்த திவ்யதர்ஷினி என்ற குழந்தை 2018ம் ஆண்டு செப். 23ம் வீட்டின் பின்புறம் தோண்டப்பட்டிருந்த 18 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தாள். இதன் அருகில் ஒரு பள்ளத்தை தோண்டி தீயணைப்புத்துறையினர் குழந்தையை உயிருடன் மீட்டனர்.

பிறநாடுகளைப் போல தொழில்நுட்பம் தேவை பேரா.ராஜமாணிக்கம் பேட்டி
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்த பேரா.பொ.ராஜமாணிக்கம் கூறுகையில்,  போர்வெல் மரணங்கள் அனைத்தும் இளம் குழந்தைகள் சார்ந்ததாக இருக்கின்றன. இம்மரணங்களைச் சந்திப்பவர்கள் பெரும்பாலும் கிராமப்புறக் குழந்தைகளே. இதற்கு முக்கிய காரணம் கிராமப்புறங்களில் அதிக அளவில் ஆழ்துளைக் கிணறுகள் உள்ளன. கிராமப்புறங்களில் தோண்டப்படும் ஆழ்துளைக் கிணறுகள் பற்றிய முழுமையான புரிதல் விவசாயிகளிடம் இருப்பதில்லை. முழுக்க முழுக்க ஆழ்துளைக் கம்பெனிகளின் கையில் இருக்கிறது. அவர்கள் தான் ஆழ்துளைக் கிணற்றின் விட்டம், ஆழம் ஆகியவற்றைத் தீர்மானிக்கின்றனர். இந்த இரண்டிலும் முதலில் கவனம் செலுத்த வேண்டும்.

ஆழ்துளைக் கிணறுகள் தோண்டுவதற்கு பல்வேறு வழிமுறைகள் வகுத்திருந்தாலும் அதை அக்கம்பெனிகள் பின்பற்றுவதில்லை. எனவே, இவைகளை தொடர்ந்து கண்காணித்தல் வேண்டும். குறிப்பாக ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள கிராம நிர்வாக அலுவலர் மூலம் தொடர் தகவல்கள் பெறுவது அவசியம். பயனற்ற ஆழ்துளைக் கிணறுகளை தேசியப் பேரிடர் மேலாண்மை அறிவித்துள்ள அனைத்து வழிமுறைகளையும் இந்த அலுவலர் கண்காணிப்பில் செய்யப்பட வேண்டும். குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தால் அவற்றைக் காப்பாற்றுவதற்கான தொழில்நுட்பங்களை மேலும் மேம்படுத்த வேண்டும்.  பிற நாடுகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களை கண்டறிந்து அதனடிப்படையில் நமது இடத்திற்கேற்ப தகவமைத்துக் கொள்ள வேண்டும்’’ என்று கூறினார்.

போர்வெல் அமைக்க விதிமுறைகள் என்ன?
1ஆழ்துளைக் கிணறு தோண்டுவதற்கு முன்னதாக மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று ரசீது பெறுவது அவசியம்.
2முறையான பாதுகாப்பு விதிகளை பின்பற்றியே கிணறு தோண்ட வேண்டும்.
3தோண்டும்போது உணவு, ஓய்வு ஆகியவற்றுக்கு இடைவெளி விடும்பட்சத்தில், ஆழ்துளை குழியை தற்காலிகமாக மூடி வைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
4பணி நடக்கும் பகுதியைச் சுற்றில் முள்வேலி கம்பி அல்லது தடுப்பு அமைத்தல் கட்டாயம்.
5தண்ணீர் கிடைக்காத பட்சத்தில் ஆழ்துளை கிணறை முறையாக மூட வேண்டும்.
6நிலம் பழைய நிலைக்கு திரும்பும் வகையில் சீர்படுத்த வேண்டும்.
7ஆழ்துளை அமைக்கப்பட்ட பகுதியை உறுதியான இரும்பு தகடு கொண்டு மூடவேண்டும். மூடியை கொண்டு மூடும்பட்சத்தில் நட்டு, போல்ட் ஆகியவை கொண்டு இறுக்கமாக மூடியை கட்ட வேண்டும்.
8ஆழ்துளை கிணறு தோண்டும் பணி முடிந்த பிறகும் மாவட்ட நிர்வாகத்துக்குத் தகவல் அளிக்க வேண்டும்.
9உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஆழ்துளை கிணற்றில் விழுந்து யாராவது உயிரிழந்தால், அந்த கிணறு அமைந்துள்ள இடத்தின் உரிமையாளரும், அதனை தோண்டிய நபருமே பொறுப்பேற்க வேண்டும்.
10பதிவு செய்யாமல், அனுமதி இன்றி ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தால், 1920 தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின் 316A பிரிவின்படி, அபராதத்துடன் கூடிய 3 முதல் 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வழிவகை உள்ளது.


Tags : Is this Earth Safe , Children , Borewell, Deaths
× RELATED கோவை மாவட்டம் முண்டாந்துறை...