×

தூங்கா நகருக்கு மாற்றம், தூக்கம் தொலைத்த “அதிகாரி’’

நெல்லை மாநகரத்தில் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, மகளிர் காவல் நிலையம் உள்ளிட்ட 18 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இதில் சட்டம் ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷனில் மூன்று ஸ்டேஷன்கள் வளம் கொழிக்கின்றன. இதில் ஒரு ஸ்டேஷனில் வீடு மற்றும் நிலம் தொடர்பான பஞ்சாயத்துக்கள் தான் அதிகம். அந்த ஸ்டேஷன் அதிகாரி சாக்கு மூட்டைகளில் பணத்தை கட்டும் அளவுக்கு வளர்ந்து விட்டாராம். மாதம் தோறும் டாஸ்மாக் பார்களிலும் ஒரு தொகை பார்த்து வந்துள்ளார். இவரது செயல்பாடுகள் வெளியே தெரியாத வகையில் சாமர்த்தியமாக உறவினர் ஒருவரையே சாரதியாக அமர்த்திக் கொண்டாராம். தந்தை ஸ்தானத்தில் இருந்து சிறுவனை மீட்க வேண்டிய ஒரு முக்கிய வழக்கில் எதிர்தரப்புக்கு ஆதரவாக மெத்தனம் காட்டியதால் கமிஷனரே நீதிமன்றத்தின் கூண்டில் ஏறி விளக்கமளிக்க வேண்டிய நிலை வந்ததாம். அப்போது விழித்துக் கொண்ட அந்த உயர் அதிகாரி, தனது உளவுப்படை மூலம் விவரங்களை தோண்டியுள்ளார். அதற்கு பிறகே அதிரடியாக அவரை தென் மண்டலத்திற்கு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியுள்ளார். இதனால் தூங்கா நகரத்தில் டூட்டி பார்க்கும் அந்த அதிகாரி சரியான தூக்கம் இல்லாமல் புலம்பி வருகிறாராம்.

டிஎஸ்பிக்கு கல்தா கொடுத்த இன்ஸ்கள்
மாங்கனி மாவட்டத்தில் கடந்த வாரத்தில் சந்தன கடத்தல் மன்னனின் பிறந்தநாளையொட்டி, அவரின் சமாதியில் பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்பினரும் மரியாதை செலுத்தினாங்க. இதனால மோதல், பிரச்னைகள் வந்துவிடக்கூடாதுன்னு பலத்த போலீஸ் பந்தோபஸ்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒரு கட்டத்தில், திடீரென 3 முக்கிய அரசியல் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் அடுத்தடுத்து வந்துட்டாங்க. அவர்களை சரியான முறையில் வழிநடத்தி, அனுப்பி வைக்க போதிய போலீஸ் இல்லைன்னு லோக்கல் டிஎஸ்பி மைக்கை பிடிச்சாராம். அதில், உட்கோட்டத்திற்கு உட்பட்ட ஸ்டேஷன்களில் இருக்கும் 3 இன்ஸ்பெக்டர்களை உடனே சம்பவ இடத்திற்கு வரும்படி உத்தரவு போட்டாராம்... ஆனால் அந்த மைக்கிலேயே நான் அந்த வேலையில் இருக்கேன்... இந்த வேலையில் இருக்கேன் எனக்கூறி கல்தா கொடுக்கிறதுலேயே குறியாக இருந்தாங்களாம். இறுதியில் விரக்தியின் உச்சத்திற்கு சென்ற டிஎஸ்பி, எல்லாத்தையும் நானே பாத்துக்கிறேன்... கட்சிக்காரங்களை எப்படி அனுப்பணும்னு எனக்கு தெரியும் என்று மைக்கில் கொந்தளித்துவிட்டார். இருந்தாலும் அதை ஒரு இன்ஸ்பெக்டரும் கண்டுக்கலையாம். இந்த விவகாரம் உயர் அதிகாரிகள் வரைக்கும் சென்றிருப்பதால், சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர்கள் இப்போ பீதியில் இருக்காங்களாம்.

மலைக்க வைக்கும் மாமூல்
குமரி மாவட்டம் இயற்கை வளங்கள் நிறைந்த மாவட்டம் ஆகும். இங்குள்ள மலைகளை உடைத்து கேரளாவுக்கு ஜல்லி கற்கள் கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் பல கட்ட போராட்டங்கள் நடந்துள்ளன. ஆனாலும் கடத்தல் நின்ற பாடில்லை. அதிகாரிகள் ஒரு பக்கம் வசூலை குவிக்க, மறுபுறம் காவல்துறையை சேர்ந்த சிலர் வசூலில் கொடி கட்டுகிறார்களாம். ஜல்லி கற்கள் மட்டுமில்லாமல், செம்மண், பாறை பொடிகளும் அதிகளவில் கடத்தி செல்லப்படுகிறது. இதே போல் ரேஷன் அரிசியும் அதிகளவில் செல்கிறது. இரவு நேர ரயில்கள் மற்றும் பஸ்களில் அதிகமாக ரேஷன் அரிசி செல்கிறது. வழக்கமாக இதுபோன்ற கடத்தல் கும்பல்கள் உள்ளூர் போலீசை செமத்தியாக கவனித்து விடுகிறார்களாம். இவர்கள் கொடுக்கும் மாமூல் போலீசாரையே மலைக்க வைக்கும் அளவுக்கு இருக்கிறது. எதிர்பார்த்ததை விட பல மடங்கு தொகை கைக்கு கிடப்பதால், மாமூல் பார்ட்டிகளை கண்டாலே போலீசாருக்கு செம உற்சாகமாக இருக்கிறது. எஸ்.பி.க்கே கொடுக்காத மரியாதை, இந்த பார்ட்டிகளுக்கு கிடைக்கிறதாம். இதனால் இந்த மாமூல் பார்ட்டிகள் மனம் குளிர்ந்து போறார்களாம். சமீபத்தில் தீபாவளிக்காக வழங்கப்பட்ட மாமூல் காரணமாக சில போலீசார் திக்குமுக்காடி போய் இருக்கிறார்கள். வீட்டுக்கே நேரடியாக வந்து சேர்ந்த பண மழையால் மனம் குளிர்ந்து, குளிர்ச்சியாக தீபாவளியை கொண்டாடி உள்ளார்கள்.

சிவகங்கை மாவட்டத்தில் பதவி ஏற்ற புதிய எஸ்பி, மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் தினமும் நூறு மோட்டார் விதிமீறல் வழக்குகள் பதிய உத்தரவிட்டார். இதனை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்ட சில சிறப்பு எஸ்ஐக்கள் மோட்டார் வழக்குபதிவு செய்வதற்கு என்று ‘டம்மி’யாக ஒரு புத்தகமும், கோர்ட்டுக்கு கணக்கு காண்பிக்க மற்றொரு புத்தகமும் வைத்துகொண்டு தினமும் ஆயிரக்கணக்கில் கல்லா கட்டுகிறார்களாம்.
கடந்த வாரம் சிவகங்கையில் இருந்து மானாமதுரை வரும் வழியில் ஒரு சிறப்பு எஸ்ஐ வாகனச்சோதனையில் ஒருவருக்கு அபராதம் விதிக்க முயன்றுள்ளார். வந்தவர் நேரடியாக அபராதத்தை கோர்ட்டில் செலுத்திக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். உடனே தனது பைக்கில் வைத்திருந்த வேறோரு புக்கில் அபராத தொகையை எழுத முயன்றபோது, இதுகுறித்து வாகனத்தில் வந்தவர் விளக்கம் கேட்டதுடன், தான் வக்கீல் என்றும் மோட்டார் வழக்குப்பதிவு செய்யும் புத்தக எண்ணை கேட்டதும் பயந்துபோன அந்த சிறப்பு எஸ்ஐ, வேறுவழியின்றி அங்கிருந்து பைக்கை எடுத்துகொண்டு ஓட்டம் பிடித்திருக்கிறார்.இதுகுறித்து அந்த வக்கீல் மாவட்டத்தின் ஓய்வு பெற்ற ஒரு போலீசை தொடர்பு கொண்டு கேட்டபோது, மாவட்டம் முழுவதும் சிறப்பு எஸ்ஐகள் பலர் டம்மி புக் வைத்து மாதம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் கல்லாகட்டி வருவது உண்மைதான் என்று உடைத்துப் பேசி இருக்கிறார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த வக்கீல் உடனடியாக டிஜிபிக்கு ஒரு புகார் மனுவை அனுப்பி வைத்திருக்கிறார். இதன்பேரில் விரைவில் நடவடிக்கை இருக்கும் என்ற எதிர்பார்ப்பில், வக்கீலுடன், வாகன ஓட்டிகள் பலரும் காத்திருக்கிறார்கள்.

Tags : city ,Tunga Police Channel , Police Channel
× RELATED திமுக சார்பில் தண்ணீர் பந்தல்