×

ஐஐடி விழாவில் சிவன் பேச்சு விண்கலத்தை தரையிறக்கும் இஸ்ரோ முயற்சி தொடரும்

புதுடெல்லி: ‘‘சந்திரயான்-2 முடிந்துபோன கதையல்ல. எதிர்காலத்தில் விண்வெளியில் விண்கலத்தை தரையிறக்குவோம்’’ என ஐஐடி டெல்லி பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ தலைவர் சிவன் பேசினார். ஐஐடி டெல்லி பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு இஸ்ரோ தலைவர் சிவன் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது: இந்தியாவில் தொழில்நுட்ப கல்வி வழங்குவதில், புனிதமான அமைப்புகள் ஐஐடிக்கள். 30 ஆண்டுகளுக்கு முன்பு நான் மும்பை ஐஐடியில் பட்டம் பெற்றபோது, வேலைவாய்ப்பு சூழல், தற்போது இருக்கும் அளவு பிரகாசமாக இல்லை. வேலைவாய்ப்புகளில் சிறப்பு பிரிவுகள் மிகவும் குறைவு. தற்போது அந்த வாய்ப்புகள் அதிகம். உலக பொருளாதாரம் நிச்சயமற்ற, குழப்பமான நிலையில் இருந்தாலும், முந்தைய தலைமுறையினரைவிட, நீங்கள் தற்போது நிலவும் சூழலை நன்றாக அறிந்துள்ளீர்கள்.

வேலைகளை புத்திசாலித்தனமாக தேர்வு செய்ய வேண்டும். வேலை வாய்ப்புகள் பல உள்ளன. ஆனால் வாழ்க்கை ஒன்றுதான். உங்களுக்கு எதில் ஆர்வம், திறமை உள்ளதோ, அதை அடையாளம் கண்டு அந்த துறையில் உள்ள வேலையை தேர்வு செய்ய வேண்டும். பணத்துக்காக வேலையை தேர்வு செய்வதை விட உங்களின் மகிழ்ச்சிக்கான வேலையை தேர்வு செய்யுங்கள். ‘சந்திரயான்-2’ திட்டம் உங்களுக்கு தெரியும். இது முடிந்துபோன கதையல்ல.  விண்கலத்தை தரையிறக்கும் தொழில்நுட்பத்தில் நம்மால் சாதிக்க முடியவில்லை. நிலவின் தரைப் பகுதியிலிருந்து 300 மீட்டர் உயரம் வரை அனைத்து செயல்பாடுகளும் நன்றாக இருந்தது.

எதிர்காலத்தில் ஆய்வுக்கலங்களை வெற்றிகரமாக தரையிறக்குவதில், இஸ்ரோ தனது அனுபவத்தையும், தொழில்நுட்ப அறிவையும் பயன்படுத்தி சாதிக்கும். சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 விண்கலத்தை அனுப்புவது, விண்ணுக்கு மனிதனை அனுப்பும் திட்டங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. வரும் மாதங்களில் மிக நவீன செயற்கைக்கோள்கள் ஏவப்படவுள்ளன. சிறிய ரக செயற்கைக்கோள்களை எடுத்துச் செல்லும் எஸ்எஸ்எல்வி ராக்கெட் தனது முதல் பயணத்தை டிசம்பர் அல்லது ஜனவரியில் தொடங்கும். இவ்வாறு இஸ்ரோ தலைவர் சிவன் பேசினார்.

Tags : ISRO ,festival ,Shiva ,IIT ,IIT Festival , IIT ceremony, Shiva speech
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...