×

குமாரசாமி ஆட்சி கவிழ்ப்பில் அமித்ஷாவுக்கு முக்கிய பங்கு: எடியூரப்பா அரசுக்கு புது சிக்கல்

* முதல்வர் ஆடியோ டேப் லீக்கானதால் பரபரப்பு
* பாஜ அரசை கலைக்க கவர்னரிடம் காங்கிரஸ் மனு

பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சியை கவிழ்த்து பாஜ ஆட்சி அமைய காரணமாக இருந்த 17 எம்எல்ஏக்கள் பாஜ தேசிய தலைவர் அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் தான் மும்பை ரிசார்ட்டில் தங்கியிருந்தனர் என்று முதல்வர் எடியூரப்பா பேசிய ஆடியோ டேப்  லீக் ஆனதால் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எடியூரப்பா ஆட்சியை கலைக்க வலியுறுத்தி காங்கிரசார் ஆளுநரை சந்தித்து நேற்று மனு அளித்தனர்.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் மஜத கூட்டணி ஆட்சி குமாரசாமி தலைமையில் நடந்தது. அப்போது பாஜவின் ‘ஆபரேசன் தாமரை’ என்ற ரகசிய நடவடிக்கையில் சிக்கிக்கொண்ட காங்கிரஸ் மற்றும் மஜத.வைச் சேர்ந்த 17 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

இவர்கள் அனைவரையும் மும்பை ரிசார்ட்டில் தங்கவைத்து, பாஜவினர் அவர்களை பாதுகாத்தனர். இதனால் பெரும்பான்மையை இழந்த குமாரசாமி ஆட்சி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்து கவிழ்ந்தது. கூட்டணி ஆட்சி கவிழ காரணமான 17 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவிட்டார். இவர்கள் 2023ம் ஆண்டு வரை தேர்தலில் போட்டியிடவும் தடை விதித்தார். இந்த உத்தரவை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கர்நாடகாவில் 17 தொகுதிகள் காலியாக இருப்பதாக அரசாணை வெளியிடப்பட்டது. இதில் 15 தொகுதிகளுக்கு டிசம்பர் 5ம் தேதி இடைத்தேர்தல் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த இடைத்தேர்தலில் பாஜ ஆட்சி அமைய தனது பதவியை தியாகம் செய்த 17 பேருக்கும் சீட் வழங்க பாஜ முடிவு செய்துள்ளது. ஆனால், பாஜவின் முடிவுக்கு அக்கட்சியினர் இடையே பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. எனவே, பாஜ நிர்வாகிகளை சமாதானப்படுத்தும் முயற்சியில் முதல்வர் எடியூரப்பா ஈடுபட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் பெங்களூரு பாஜ அலுவலகத்தில் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மற்றும் வேட்பாளர் தேர்வு கூட்டம்  முதல்வர் எடியூரப்பா தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் முதல்வர் எடியூரப்பா பேசுகையில், ‘‘கர்நாடகாவில் காங்கிரஸ்-மஜத கூட்டணி அகற்றப்பட்டு மீண்டும் பாஜ ஆட்சி அமைய  17 பேர் தங்கள் பதவியை தியாகம் செய்துள்ளனர். அவர்களின் தியாகத்தை மறந்து குற்றவுணர்வுக்கு ஆளாக நான் விரும்பவில்லை.

எனது முயற்சியாலும், பாஜ தேசிய தலைவர் அமித்ஷா வழிகாட்டுதல் படியும் காங்கிரஸ்-மஜதவை சேர்ந்த 17 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். மும்பை ரிசார்ட்டில் இவர்கள் தங்கியிருந்தபோது அமித்ஷாவின் நேரடி கட்டுப்பாட்டில் இவர்கள் பாதுகாக்கப்பட்டனர். எனவே இடைத்தேர்தலில் அவர்களுக்கு சீட் வழங்க வசதியாக பாஜ நிர்வாகிகள் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார். பாஜ வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் முதல்வர் எடியூரப்பா பேசிய இந்த ஆடியோ ‘லீக்’ ஆகி சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதனால் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆடியோவை கேட்டு அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் தலைவர்கள், கூட்டணி ஆட்சியை குறுக்கு வழியில் கவிழ்த்து ஆட்சியை பிடித்த எடியூரப்பா மற்றும் அமித்ஷாவுக்கு கண்டனத்தை பதிவு செய்தனர். மேலும், மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ்குண்டுராவ், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, செயல் தலைவர் ஈஸ்வர் கண்ட்ரே உள்ளிட்டோர் நேற்று ராஜ்பவன் சென்று கவர்னர் வி.ஆர்.வாலாவை சந்தித்தனர். அப்போது, மாநில அரசை கலைக்கும்படி ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யவேண்டும் என ஆளுநரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

‘மத்திய அமைச்சராக பதவி வகிக்க அமித்ஷா தகுதி இழந்துவிட்டார்’

ஆளுநரை சந்தித்த பின்னர் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நிருபர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ், மஜத கூட்டணி அரசை கவிழ்த்தது தாங்கள் தான் என்பதை முதல்வர் எடியூரப்பா ஒப்புக்கொண்டு விட்டார். அது மட்டும் இன்றி இதற்கு காரணம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா என்பதையும் அவரே கூறியுள்ளார். இதற்கு அவர் பேசிய ஆடியோவே சாட்சியாக உள்ளது. கூட்டணி அரசை தான் மட்டும் அல்ல, அமித்ஷாவும் சேர்ந்தே கலைத்தோம் என ஒப்புக்கொண்ட பிறகு முதல்வர் பதவியில் நீடிக்கும் தார்மீக உரிமையை எடியூரப்பா இழந்துவிட்டார். 17 எம்எல்ஏக்கள் மும்பையில் 2 மாதம் தங்கியிருந்தபோது அமித்ஷாவே நேரடியாக அவர்களை கண்காணித்தார் என்கிற தகவலும் இப்போது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. முதல்வர் எடியூரப்பாவின் பேச்சு அடங்கிய  ஆடியோவை கவர்னர் வி.ஆர்.வாலாவிடம் ஆதாரத்துடன் அளித்துள்ளோம்.

ஜனநாயகம் எப்படி படுகொலை செய்யப்பட்டது என்பது சாட்சியுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. மக்கள் ஆட்சியை படுகொலை செய்த முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அரசு மாநிலத்தில் நீடிக்கக்கூடாது என்பதால் உடனடியாக மாநில அரசை கலைக்கும் வகையில் ஜனாதிபதிக்கு சிபாரிசு செய்யும்படி ஆளுநரிடம் கேட்டுக்கொண்டுள்ளோம். அது போல் மத்திய உள்துறை அமைச்சராக பதவி வகிக்கும் அமித்ஷா, அரசியல்விதிக்கு எதிராக நடந்துள்ளார். எனவே, மத்திய அமைச்சரவையில் நீடிக்கும் தகுதியை அவர் இழந்துவிட்டார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் இருந்து அமித்ஷா உடனடியாக நீக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : coup ,Amit Shah ,government ,Yeddyurappa , Kumaraswamy regime, Amit Shah, Yeddyurappa government
× RELATED ஜம்மு – காஷ்மீரில் செப்டம்பருக்குள்...