×

அடுத்த 10 நாட்களில் 5 முக்கிய வழக்குகளில் தீர்ப்பு: அதிரடிக்கு காத்திருக்கிறது உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இன்னும் 10 நாட்களில் ஓய்வுபெற உள்ள நிலையில், 5 முக்கிய வழக்குகளில் தீர்ப்புகளை வழங்க உள்ளார். இது உச்சநீதிமன்ற வரலாற்றில் புதிய மைல் கல்லாக இருக்கும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் நவ. 17ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதனால், 4ம் தேதி முதல் 8ம் தேதி வரையும், 11ம் தேதி முதல் 15ம் தேதி வரையும் வேலை நாட்களில் அவர் வழக்குகளை  விசாரிப்பார். இதனால் மொத்தம் 10 வேலை நாட்களே அவருக்கு உள்ளன. இந்த நிலையில், அவர் முன் 5 முக்கிய வழக்குகளின் தீர்ப்புகள் நிலுவையில் இருக்கின்றன. இந்த தீர்ப்புகளும் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் விபரம் வருமாறு:
1. அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்மபூமி-பாபர் மசூதி நிலவழக்கு. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை நிர்மோகி அரோரா, சன்னி வக்பு வாரியம், ராம் லல்லா ஆகிய 3 தரப்பினரும் உரிமை கோரி வந்தனர். இந்த வழக்கை விசாரித்த  அலகாபாத் உயர் நீதிமன்றம் இந்த 2.77 ஏக்கர் நிலத்தை 3 தரப்பினரும் சரிசமமாகப் பிரித்துக்கொள்ளத் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து 14 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களைத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் 5 நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வு நாள்தோறும் விசாரணை நடத்திவந்தது. வாதங்கள்  முடிந்தநிலையில், தேதி குறிப்பிடாமல் கடந்த 18ம் தேதி தீர்ப்பை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஒத்திவைத்தார். இந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கேரளாவில் உள்ள சபரிமலையில் அனைத்து பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து 65 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல்  செய்யப்பட்டுள்ளன. இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரிக்கப்பட்டுத் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

3. மத்திய அரசு பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாகக் கூறிய சீராய்வு மனுவும் விசாரிக்கப்பட்டுத் தீர்ப்பு நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கின் விசாரணை முடிந்து  தீர்ப்பு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

4. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தவறாக திரித்துக் கூறி, காவல்காரர் திருடன் என்று ரஃபேல் வழக்கில் குற்றம்சாட்டினார். இதுதொடர்பான அவதூறு வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

5. நாடாளுமன்றத்தில் கடந்த 2017ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட நிதி மசோதாவின் அரசியலமைப்பு செல்லுபடி குறித்து பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் மீதான விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே மேற்கண்ட 5 முக்கிய வழக்குகளின் தீர்ப்புகளும் அடுத்துவரும் 10 நாட்களுக்குள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உச்சநீதிமன்ற வரலாற்றில் புதிய மைல் கல்லாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Judge ,Supreme Court , 5 Major verdict in next 10 days: Supreme Court awaits action
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...