×

தீவிரவாதிகளுடன் லேப்டாப் மூலம் வீடியோ கால் பேசிய திருச்சி வாலிபர்: என்ஐஏ விசாரணையில் அம்பலம்

மணப்பாறை: திருச்சியை சேர்ந்த வாலிபர், லேப்டாப் மூலம் தீவிரவாதிகளுடன் வீடியோ கால் பேசிய தகவல் அம்பலமாகி உள்ளது. இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது நடந்த குண்டுவெடிப்பில் 250க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த செயலில் ஈடுபட்ட தீவிரவாத அமைப்புக்கு தமிழகத்தை சேர்ந்த சிலரிடம், தொடர்பு இருப்பது என்ஐஏ அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இது தொடர்பாக கடந்த ஜூன் மாதம் கோவை, நாகை, நெல்லை மாவட்டங்களில் பலரது வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக நாகை, திருச்சி, கோவை, தூத்துக்குடி உள்பட 6 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர். இதில் லேப்டாப், செல்போன், சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் திருச்சி அருகே உள்ள இனாம்குளத்தூரை சேர்ந்தவர் சாகுல் அமீது (29). தனியார் பால் நிறுவனத்தில் விற்பனையாளராக வேலைபார்த்து வருகிறார். இவரது வீட்டில் கொச்சியில் இருந்து வந்த என்ஐஏ டிஎஸ்பி விஜயகுமார் தலைமையில் 3 பேர், நேற்றுமுன்தினம் அதிகாலை சோதனை நடத்தினர்.

அப்போது, சாகுல் அமீது வீட்டில் இல்லை. பெற்றோர் தான் இருந்தனர். அவரது வீட்டில் இருந்து லேப்டாப், டைரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். ஏற்கனவே கோவை குனியமுத்தூரில் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த ஒருவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். அவர் தீவிரவாதிகளுடன் வீடியோ காலில் பேசியது உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் இனாம்குளத்தூரை சேர்ந்த சாகுல் அமீதுவும், லேப்டாப் மூலம் தீவிரவாதிகளுடன் பேசியுள்ளார் என்றும் குனியமுத்தூரை சேர்ந்த தீவிரவாதி தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் தான் என்ஐஏ அதிகாரிகள் சாகுல் அமீது வீட்டில் சோதனை நடத்தி லேப்டாப்பை பறிமுதல் செய்துள்ளனர். இதுபற்றி டிஎஸ்பி விஜயகுமாரிடம் கேட்ட போது, சாகுல் அமீதுவின் லேப்டாப்பை ஆய்வு செய்து வருகிறோம். அவர் தீவிரவாதிகளுடன் பேசியது உறுதிப்படுத்தப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags : Trichy ,militants , Terrorist
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...