×

காவேரி - கோதாவரி இணைப்புக்கு முதற்கட்டமாக ரூ.60 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சர் வீரமணி பேச்சு

வேலூர்: காவேரி- கோதாவரி திட்டத்தை செயல்படுத்துவதற்காக முதற்கட்டமாக ரூ.60 ஆயிரம் கோடி நிதி  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக விஐடியில் நடந்த உழவர் களஞ்சியம் கண்காட்சி துவக்க விழாவில் அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார். வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் 2 நாள் உழவர் களஞ்சியம் கண்காட்சி துவக்க விழா நேற்று நடந்தது. விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கி பேசியதாவது: தமிழகத்தில் 1.5 கோடி ஏக்கர் சாகுபடி நிலம் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த அளவு குறைந்து வருகிறது. இதற்கு மக்கள் தொகை அதிகரிப்புதான் காரணம். இதனால் கடந்த 10 ஆண்டுகளில் 12 லட்சம் ஏக்கர் சாகுபடி நிலங்களை இழந்து விட்டோம். விவசாயிகளுக்கு விவசாயத்தின் மீதான ஆர்வம் குறைந்து கொண்டே வருகிறது.

சமீபத்திய கணக்கின்படி 8 லட்சம் பேர் விவசாய தொழிலை விட்டு மாற்று வேலைக்கு சென்றுள்ளனர். இந்த நிலை மாறி விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்ற வேண்டும். மழை நீரை சேமிக்க வேண்டும். வேலூர் மாவட்டத்தில் உள்ள 1,200 ஏரிகளை ஒழுங்காக பராமரிக்க வேண்டும். கோதாவரியில் மட்டும் ஆண்டுக்கு 3 ஆயிரம் டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இதை தடுத்தாலே, 5 தென்மாநிலங்கள் பயனடையலாம். இதற்காக மத்திய, மாநில அரசுகள் கோதாவரி- கிருஷ்ணா நதி நீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் காவிரி நீர் வீணாக கடலில் கலப்பதையும் தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து கவுரவ விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும், காட்பாடி எம்எல்ஏவுமான துரைமுருகன் பேசுகையில்,  ‘ஜி.விசுவநாதன் விவசாயத்தின் மீது எப்போதும் கவனம் செலுத்தி வருகிறார். திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்ட விவசாயிகள் பயன் பெற பல்வேறு நிகழ்ச்சிகளை பல ஆண்டுகளாக  நடத்தி வருகிறார். மழை நீரை சேமிக்க பாலாற்றில் அதிகளவில் சிற்றணைகளை கட்ட வேண்டும். இவ்வாறு சேமிக்கப்படும் நீர் வறண்ட பகுதிகளுக்கு சென்று அப்பகுதி செழிக்க வேண்டும்’ என்றார். இதையடுத்து சிறப்பு விருந்தினர் அமைச்சர் கே.சி.வீரமணி பேசுகையில், ‘நாட்டின் தொழில்களில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. தென்பெண்ணை- பாலாறு இணைப்பு திட்டம் செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதுதவிர முதற்கட்டமாக ரூ.60 ஆயிரம் கோடி கோதாவரி- காவேரி திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது’ என்றார். இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை, வேலூர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாய, உழவர் கூட்டமைப்புகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக உழவர் களஞ்சியம் கண்காட்சியில் 75 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதை எம்எல்ஏ துரைமுருகன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

முன்னதாக விழாவுக்கு கலெக்டர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார். விஐடி இணை துணை வேந்தர் நாராயணன் வரவேற்றார். ஆதிபராசக்தி வேளாண் கல்லூரி மாணவிகள் அமைத்திருந்த அரங்கில் பயனற்ற போர்வெல்களில் நீர் செறிவூட்டுதல், சோலார் மின்சாரம் மூலம் மோட்டார்கள் இயக்குவது போன்றவற்றை செயல்விளக்கங்கள் மூலம் செய்து காட்டினர். கண்காட்சியில் உழவுத்தொழிலை வெளிப்படுத்தும் வகையில் காய்கறிகளால் வடிவமைக்கப்பட்ட காளைகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இன்றும் கண்காட்சி நடக்கிறது.

Tags : Veeramani ,Kaveri-Godavari ,Weeramani , Minister Veeramani
× RELATED மோடி மீது எடுக்கப்படும் நடவடிக்கை...