×

பென்னாகரம் அருகே மர்ம காய்ச்சலுக்கு குழந்தை, வாலிபர் பலி

பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த ஏரியூர் ராமகவுண்டஅள்ளி பகுதியை சேர்ந்தவர் விவசாயி பெரியசாமி. இவருக்கு 2 வயதில் மித்ரா என்ற மகள்  இருந்தார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் மித்ராவுக்கு காய்ச்சல் வந்துள்ளது. இதனால் பெற்றோர் குழந்தையை ஏரியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை முடிந்த நிலையில்,  நேற்று இரவு மீண்டும் வீடு திரும்பி உள்ளனர். அப்போது, மருத்துவர்கள் குழந்தைக்கு மருந்து மாத்திரைகளை வழங்கினர். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில், மித்ராவின் பெற்றோர், குழந்தைக்கு உணவு கொடுத்த பின்னர் மருத்துவரின் பரிந்துரைப்படி மருந்து கொடுத்து குழந்தையை உறங்க வைத்துள்ளனர். தொடர்ந்து, இன்று காலை எழுந்து பார்த்த போது, குழந்தை மூச்சிபேச்சின்றி அசைவில்லாமல் இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் பதறிபோய் குழந்தையை தூக்கி கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைக்கு இரவில் கடும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் குழந்தை இறந்ததாகவும் தெரிவித்தனர்.

இதேபோல், ராமகவுண்டஅள்ளி குண்டப்பனகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் தங்கம். இவரது மகன் ராஜன் (35). சொந்தமாக மெடிக்கல் வைத்து நடத்தி வந்தார். இவருக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன், காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு 2 நாள் சிகிச்சைக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சேலம் அரசு மருத்துவமனையில் ராஜனை தனி வார்டில் வைத்து, பல்வேறு சோதனைகள் செய்யப்பட்ட பின்,  தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் ராஜனின் குடும்பத்தினர் இன்று காலை அவரை பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ராஜன் போகும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ராமகவுண்டஅள்ளியில் மர்ம காய்ச்சலுக்கு அடுத்தடுத்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடைய பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Pennagaram Pennagaram , Pennagaram
× RELATED ரயில் நிலையத்தில் பெண் குழந்தை மீட்பு