×

கந்த சஷ்டி திருவிழா: திருச்செந்தூர் கடற்கரையில் சூரபத்மனை வதம் செய்தார் முருகப்பெருமான்...லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

திருச்செந்தூர்: திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமி மலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகியவை முருகனின் அறுபடை வீடுகளாகும். இதில் இரண்டாவது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்தசஷ்டி  திருவிழா கடந்த 28ம் தேதி துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை 4.00  மணியளவில் திருச்செந்தூர் கடற்கரையில் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு  விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மதியம் 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது.

5.20 மணியளவில் திருச்செந்தூர் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர் சூரனை வதம் செய்தார். முதலில் யானை முகம் கொண்ட சூரனையும், இரண்டாவது சிங்க முகம் கொண்ட சூரனையும் வேல் கொண்டு சுவாமி ஜெயந்திநாதர் வதம்  செய்தார். இறுதியில் மாமரமும், சேவலுமாய் உருமாறிய சூரனை வேலும், மயிலுமாக ஆட்கொள்கிறார். சேவலை தனது கொடியாகவும், மயிலை தனது வாகனமாகவும் ஆட்கொள்கிறார். தொடர்ந்து சந்தோஷ மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு  சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அதன்பின் சுவாமியும், அம்பாளும் புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளி கிரிவலம் வந்து 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயாபிஷேகம் நடைபெறும்.
சூரசம்ஹார நிகழ்ச்சியைக்காண தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும், இலங்கை, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர்.  சஷ்டிவிழாவை முன்னிட்டு 3500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேபோல் திருப்பரங்குன்றம், பழநி, சுவாமி மலை, பழமுதிர்ச்சோலை ஆகிய வீடுகளிலும் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

கால பூஜைகள்:

7ம் திருநாளான நாளை(3ம்தேதி) அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், உதயமார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் மற்ற கால பூஜைகள் நடக்கின்றன. அதிகாலை 5 மணிக்கு தெய்வானை தபசுக்காட்சிக்கு  எழுந்தருளுகிறார். மாலை 6 மணிக்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் மாலை மாற்றும் நிகழ்ச்சி தெற்கு ரதவீதி, மேலரதவீதி சந்திப்பில் நடக்கிறது. இரவு சுவாமிக்கும், தெய்வானைக்கும், முருகன் கோயிலில் திருக்கல்யாணம் நடக்கிறது.

Tags : beach ,festival ,Surabadman ,Muruga Peruman ,Kanda Sashti ,Thiruchendur ,devotees , Kanda Sashti festival: Muruga Peruman killed Surabadman on Thiruchendur beach ...
× RELATED ஈஞ்சம்பாக்கம் கடற்கரையில் பாட்டிலால் குத்தி வாலிபர் கொலை