×

டெல்லியில் அபாய அளவை தாண்டிய காற்று மாசு: பொதுமக்களுக்கு யோசனை வழங்கிய மத்திய அரசு

டெல்லி: டெல்லியில் நிலவும் கடுமையான காற்று மாசினை சமாளிக்க பொதுமக்களுக்கு சில யோசனைகளை அரசு வழங்கியுள்ளது. டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு ஏற்பட்டுள்ளது. இந்த காற்று மாசினால் சிறுவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க நவம்பர்  5ம் தேதி வரை அரசு பள்ளிகள், அரசின் உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், காற்று மாசு காரணமாக தலைநகர் டெல்லியில் சுப்ரீம் கோர்ட் அமைத்த சுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்பாட்டு ஆணையம் பொது சுகாதார அவசரநிலையை பிறப்பித்துள்ளது.

அதில் திறந்த வெளியில் விளையாடும் கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளை தற்போது தவிர்ப்பது நல்லது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு அதிகம் இருக்கும் என்பதால் அந்த நேரத்தில் காற்றில் உள்ள மாசு கீழயிறங்கும். எனவே அந்த நேரங்களில் நடைப்பயிற்சி போன்றவற்றை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தரமான முகமூடி உரைகளை பயன்படுத்த வேண்டும் என்றும், மூச்சிரைக்கும் வகையிலான உடற்பயிற்சிகளை தவிர்ப்பது நலம் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதிகப்படியான தண்ணீர் பருக வேண்டும் எனவும், வாழைப்பழம் போன்ற பழவகைகளையும், கீரை போன்ற பச்சை காய்கறிகளையும் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இன்ஹேலர், நெபுலேசர் போன்ற மூச்சு கருவிகளை எப்போதும் தயார் நிலையில் வைத்திருத்தல் நல்லது எனவும், வீட்டில் உள்ள கதவு, ஜன்னல்களை சரியாக மூடி வைப்பதுடன் சூடான நீர் கொண்டு ஆவி பிடிக்கவும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சுவாச கோளாறு, மூச்சுவிடுவதில் சிரமம் ஆகியவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Tags : Delhi ,Central Government ,Public , Delhi, air pollution, public, central government, idea
× RELATED நாடு முழுவதும் உடற்பயிற்சி...