×

இந்து பிரமுகர்களை கொல்ல சதித்திட்டம்: சென்னை, நாகையில் 12 பேரை பிடித்து என்.ஐ.ஏ அதிகாரிகள் கிடுக்குபிடி விசாரணை

சென்னை: சென்னை மற்றும் நாகையில் 12 பேரை பிடித்து என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்புள்ளதா என்ற கோணத்தில் துருவி துருவி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல இந்து பிரமுகர்களை கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டது பற்றியும் அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு இறுதியில் இலங்கையில் நடந்த குண்டுவெடிப்புக்கு பிறகு ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருக்கும் தமிழர்கள் யார்-யார் என்பதை கண்டுபிடிக்கும் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் இந்து தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்டதாக பல்வேறு தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய 6 பேரை கைது செய்து என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

இது தொடர்பான விசாரணையில் பல தகவல்கள் வெளியாகின. இதற்கான குற்றப்பத்திரிகையும் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருக்கும் பல நபர்களின் விவரங்கள் என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு கிடைத்தது. அதனடிப்படையில் கோவை, திருச்சி, நாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் சிலரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், நாகப்பட்டினத்தில் நேற்று 4 பேரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இஸ்மத் அலி, உமர் ஷெரீப், ஜியாவுன், முகமது ஜெகபர் ஆகியோரை காவல் நிலையத்துக்கு வரவழைத்து 10 மணி நேரத்திற்கு மேலாக விசாரணையானது நடைபெற்றுது. மேலும் அந்த 4 பேரிடமும் 3வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, நாகை, கோவை சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற சோதனை தொடர்பாக மேலும் 12 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதுதவிர, என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் 2 லேப்-டாப்கள், 8 மொபைல் போன்கள், 5 சிம் கார்டுகள், ஒரு மெமரி கார்டு கைப்பற்றப்பட்டன. மேலும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு கொண்டதை உறுதிப்படுத்தும் 14 ஆவணங்களும் சிக்கின. இந்த ஆவணங்களை தடயவியல் துறைக்கு என்.ஐ.ஏ அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இவர்களின் இணையதள பக்கங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

Tags : NIA ,dignitaries ,persons ,Chennai , NIA, officials, Naga, Chennai, Investigation, Hindu dignitaries, IS extremist organization
× RELATED பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு...