×

டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் சுகாதாரமின்றி செயல்பட்ட தனியார் தொழிற்சாலைக்கு சீல்: ரூ.1 லட்சம் அபராதம்

பூந்தமல்லி: சென்னை பூவிருந்தமல்லியில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் சுகாதாரமின்றி செயல்பட்ட தனியார் தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டிருக்கிறது. பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன்படி, அப்பகுதியில் உள்ள தொழிற்சாலை, பள்ளி, கல்லூரிகள் என அனைத்திற்கும் முதற்கட்டமாக எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும், டெங்கு காய்ச்சல் குறித்தும், டெங்கு கொசு எவ்வாறு உற்பத்தி ஆகிறது என்பது குறித்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல, நகராட்சியின் பல இடங்களை நிலவேம்பு காசாயம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நகராட்சி நிர்வாகம் அளித்த எச்சரிக்கை அறிவுறுத்தலின் படி நடந்து கொள்ளாத பள்ளி, கல்லூரி மற்றும் தொழிற்சாலைகள் ஆகியவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்து அவற்றிற்கு அபராதத்தை விதித்து வருகின்றனர்.

அதன்படி தற்போது வரை பூந்தமல்லி நகராட்சியில் ரூ.5 லட்சத்திற்கும் மேல் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை திருவள்ளூர் மாவட்ட துணை ஆட்சியர் அப்துல் பாரி மற்றும் பூந்தமல்லி நகராட்சி ஆணையர் பிரிட்டோ, சுகாதார ஆய்வாளர் கதிரேசன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட 2வது வார்டில் உள்ள ஆர்.எஸ்.டி என்ற தனியார் தொழிற்சாலையில் ஆய்வு செய்தனர். அங்கு பாட்டில்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் டெங்கு கொசு உற்பத்தியாகும் எண்ணற்ற லாவா புழுக்கள் கண்டறியப்பட்டதால் தொழிற்சாலைக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஏற்கனவே, இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்தும் சுகாதாரமின்றி இருந்ததால் தொழிற்சாலைக்கு தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலைக்கு கடந்த ஆண்டும் இதேபோல ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Tags : factory , Dengue Mosquito, Production, Fines, Poonthalli, Factory, Seal
× RELATED 97 பேர் பங்கேற்பு பெரம்பலூர் அருகே...