×

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி 8ம் நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டம்

வேலூர்: விடுதலை செய்ய வலியுறுத்தி வேலூர் மத்திய சிறையில் 8ம் நாளாக நளினி உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டுள்ளார். உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டுள்ள நளினியிடம் சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். பெண்கள் ஜெயிலில் முருகனின் மனைவி நளினி அடைக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகன் அடைக்கப்பட்டிருந்த அறையில் சிறை காவலர்கள் சோதனை நடத்தினர்.

அப்போது அவரது அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு ஆண்ட்ராய்டு செல்போன், 2 சிம்கார்டு, ஹெட்செட் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து முருகனும், அவரது மனைவி நளினியும் சந்திக்க தடை விதிக்கப்பட்டது. மேலும் முருகனுக்கு ஜெயிலில் வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தனி அறையில் முருகன் அடைக்கப்பட்டுள்ளார். இதனை கண்டித்து முருகன் சாப்பிட மறுத்து உண்ணாவிரதம் இருக்கிறார். இந்நிலையில், சிறையில் உள்ள முருகனை சிறை நிர்வாகம் கொடுமைப்படுத்துவதாக கூறி நளினி கடந்த 26ம் தேதி முதல் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

இன்று 8-வது நாளாக நளினி தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். அதேபோல் தன்னை தனியறையில் அடைத்து கொடுமைப்படுத்துவதாக கூறி முருகனும் நேற்று 15வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதனை தொடர்ந்து உண்ணாவிரதத்தை கைவிடுமாறு சிறைத்துறை அதிகாரிகள் வலியுறுத்தினர். ஆனால் நளினி தனது கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரதத்தை கைவிட முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதையடுத்து 2 பேரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் சிறைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.


Tags : jail ,Nalini ,Rajiv Gandhi ,Vellore Central Prison ,release , Liberation, Vellore Central Prison, Nalini, 8th day, agitation
× RELATED சென்னை ராஜிவ் காந்தி அரசு...