×

சீனா உட்பட 16 நாடுகளுடன் தடையில்லா வணிக ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி கையெழுத்திடுவதற்கு எதிர்ப்பு

டெல்லி: சீனா உட்பட 16 நாடுகளுடன் தடையில்லா வணிக ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி கையெழுத்திடுவதற்கு எதிர்ப்பு வலுத்துள்ளது. தாய்லாந்தில் நடைபெறும் ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக பாங்காங் புறப்பட்டு சென்றுள்ளார். இந்த மாநாட்டில் பங்கேற்கும் மோடி சீனா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட 16 நாடுகளுடன் தடையில்லா வணிக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று தெரிகிறது. இந்த தடையில்லா வணிக ஒப்பந்தத்தின் மூலம் சீனா தயாரிப்புகளும், நியூசிலாந்தில் தயாரான வேளாண் பொருட்களும் இந்தியாவில் குவியும் என்பதால் விவசாயிகள், சிறு வியாபாரிகள் மற்றும் சிறு தொழில் துறையினர் கவலை அடைந்துள்ளனர்.

எனவே தடையில்லா வணிக ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி கையெழுத்திட கூடாது என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.மேக் இன் இந்தியா என்ற மோடி அரசின் திட்டத்துக்கு மாறாக சீன தயாரிப்புகளே குவியும் நிலை உருவாகிவிடும் என்று சந்தை நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே பிரதமர் நரேந்திர மோடி தடையில்லா வணிக ஒப்பந்தத்தில் கையெழுத்திட கூடாது என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து அங்குள்ள சந்தை நிபுணர் தெரிவித்ததாவது, பிரதமர் மோடி இந்த புதிய  ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் எந்தவொரு வரி கட்டுப்பாடும் இல்லாமல் மற்ற நாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யலாம்.

இதுவே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய விதியாகும். அந்த அடிப்படையில் பால் பொருட்களை எந்தவிதமான வரிகளும் இன்றி இறக்குமதி செய்ய முடியும். அதனால் இங்கு இருக்கக் கூடிய ஆவின் போன்ற பல்வேறு பால் உற்பத்தி கூட்டுறவுகள் அழிந்துவிடும். தொடர்ந்து இங்குள்ள மிளகு போன்ற பொருட்கள் வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டால் அவைகளும் இந்த சந்தையில் அழிந்து விடும். இதனையடுத்து தெற்கு ஆசிய பகுதியில் இருந்து கொண்டுவரக்கூடிய அரிசி என்பது மிக குறைந்த விலையில் கிடைக்கும். ஆகவே காவிரி டெல்டா பகுதியின் நெல் உற்பத்தி முற்றிலுமாக பின்னடைவை சந்திக்கும். விவசாயிகள் நெருக்கடிக்கு ஆளாக்கப்படுவார்கள். எனவே இந்த புதிய ஒப்பந்தங்களால் விவசாயம் முற்றிலும் அழிந்து விடும் ஆபத்து உள்ளதாக அவர் தெரிவித்துள்ளனர்.


Tags : Modi ,countries ,signing ,China , China, 16 country, free trade pact, PM Modi, signature, protest
× RELATED இந்தியா-சீனா இடையே வலுவான உறவு இரு...