×

பணநாயகத்தை நம்பி அதிமுக பெற்ற வெற்றி தொடராது வரவிருக்கும் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியைப் பெறும்: மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: “பணநாயகத்தை நம்பி அதிமுக பெற்ற வெற்றி தொடர வாய்ப்பே இல்லை என்றும், வரவிருக்கும் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியைப் பெறும்’’ என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார். திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், கடம்பத்தூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ரமேஷ் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். தொடர்ந்து அவர் பேசியதாவது: 1956 நவம்பர் 1ம் தேதி மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தமிழ் மாநிலம் என்ற உரிமையை அன்றைக்கு நாம் பெற்றோம். அப்போது பிரிக்கப்பட்ட மாநிலம்தான் இந்த தமிழகம். சென்னை மாகாணம்” (மெட்ராஸ் ஸ்டேட்) என்றழைக்கப்பட்டு வந்த நமது மாநிலத்திற்கு, ‘தமிழ்நாடு’ என்ற பெயரையும் சட்டமன்றத்தில் அண்ணா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றித் தந்தார். அப்படி நிறைவேற்றித் தந்ததற்கு ஒரு பாராட்டு விழா தமிழக அரசின் சார்பில், நம்முடைய சென்னை மாநகரத்தில் இப்போது இருக்கும் கலைவாணர் அரங்கத்தில் நடந்தது. “நமது மாநிலத்திற்கு ‘தமிழ்நாடு’ என்ற பெயர் கிடைத்திருப்பதையொட்டி இந்த விழா நடைபெறுகிற நேரத்தில், என் உடல் நலத்தைப் பொறுத்தவரையில் இந்த விழாவிற்கு வரக்கூடாது, பங்கேற்கக்கூடாது என்று என்னுடைய மருத்துவர்கள், குடும்பத்தினர்  தம்பிமார்கள் எல்லாம் தடுத்தார்கள்.

ஆனால், அதையெல்லாம் மீறி நான் வந்திருக்கிறேன் என்றால், தமிழ்நாட்டிற்கு ‘‘தமிழ்நாடு’’ என்று பெயர் கிடைத்திருக்கும் இந்த விழாவில் நான் கலந்து கொள்ளவில்லை என்றால், என்னுடைய உடல் இருந்து எந்தப் பயனும் இல்லை. அந்த உணர்வோடுதான் நான் இந்த விழாவில் பங்கேற்க வந்திருக்கிறேன்”- என்று அண்ணா சொன்னார். 1996ம் ஆண்டு கலைஞர் முதலமைச்சராக இருந்த போது, ‘மெட்ராஸ்’ என்ற இந்த மாநகரத்தின் பெயரை ‘‘சென்னை’’ என்று மாற்றினார் அந்தச் சென்னைக்கு இரண்டு முறை மேயராக இருக்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றவன் நான் என்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.   5ம் வகுப்பு, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகிற கட்டாயம் இன்றைக்கு நம்முடைய குழந்தைகளுக்கு ஏற்பட்டிருக்கிறது. மத்திய அரசு புதிய கல்விக்கொள்கை திட்டத்தைக் கொண்டு வந்து 5ம் வகுப்பு, 8ம் வகுப்பிற்கும், பொதுத் தேர்வு நடத்திட வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறது. இன்னும் சட்டம் கொண்டுவந்து உத்தரவு போடவில்லை. அதை நிறைவேற்றிட வேண்டும் என்று ஆணையும் வரவில்லை. ஆனால், அதற்கு முன்பே, இங்கு எடப்பாடி தலைமையில் இருக்கும் எடுபிடி ஆட்சி 5ம் வகுப்பு, 8ம் வகுப்பில் இன்றைக்கு பொதுத் தேர்வு எழுதக்கூடிய சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறார்கள் என்றால், நம் வீட்டுக் குழந்தைகள் கல்வியில் முன்னேறி விடக்கூடாது, அவர்கள் கல்வியில் சிறந்தவர்களாக வந்துவிடக்கூடாது என்பதற்காக, இதுபோன்ற திட்டங்களை திட்டமிட்டுச் செய்து கொண்டிருக்கிறது.

 இவற்றையெல்லாம் புரிந்து கொண்டு நீங்கள் வரக்கூடிய எந்த தேர்தலாக இருந்தாலும். உள்ளாட்சித் தேர்தலாக இருந்தாலும் சரி; பொதுத்தேர்தலாக இருந்தாலும் சரி; அது எந்தத் தேர்தலாக இருந்தாலும் திமுகவை பெரு வெற்றி பெறச் செய்ய வேண்டும். இப்போது இந்த இரண்டு இடைத் தேர்தலில் ஆளுங்கட்சி ஜனநாயகத்தை நம்பாமல் - பணநாயகத்தை நம்பியிருக்கலாம்; பண நாயகம் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், இது தொடராது; தொடர்வதற்கு வாய்ப்புக் கிடையாது. வரவிருக்கும் தேர்தலில் திமுக, ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெற, நீங்கள் அனைவரும் சிறப்பான ஆதரவை வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

‘மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்தாக  அதிமுக அரசு மாறி இருக்கிறது’
தமிழக மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்தாக இன்றைக்கு அதிமுக அரசு மாறி இருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு தேசிய கல்வி கொள்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிடும் முன்பே, முந்திக்கொண்டு 5 மற்றும் 8ம் வகுப்புகளிலும் பொதுத்தேர்வு என்று அறிவித்திருப்பதால் தான், தமிழகத்தில் நடப்பது அதிமுக அரசு அல்ல; பாஜ அரசு என்கிறோம். தமிழக மக்களின் நலனைப் பாதிக்கும் எந்தத் திட்டத்தை மத்திய பாஜ அரசு கொண்டு வந்தாலும், அதை ஆதரிக்கும் அதிமுக ஆட்சி தான், இன்றைக்கு தமிழக மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்தாக மாறி இருக்கிறது. இவ்வாறு பதிவில் கூறியுள்ளார்.



Tags : DMK ,election ,MK Stalin ,speech ,victory , Bureau, PMM, DMK, MK Stalin
× RELATED இணையதளத்தில் விளம்பரம் வெளியிட்டு...