×

சென்னையிலிருந்து குவைத் சென்றபோது நடுவானில் விமானம் தீப்பிடித்ததால் பரபரப்பு: 159 பயணிகள் தப்பினர்

சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து குவைத் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 1.40 மணிக்கு புறப்பட்டது. விமானத்தில் 154 பயணிகள், 5 விமான சிப்பந்திகள் உட்பட 159 பேர் பயணித்தனர். அப்போது விமானத்தின் சரக்குகள் வைக்கும் அறையில் இருந்து திடீரென புகைவந்ததால் அலாரத்தில் எச்சரிக்கை மணி ஒலித்தது.  இதையடுத்து விமானி உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்து சென்னை விமான நிலைய அதிகாரிக்கும் அவசரமாக தெரிவித்து விமானம் தரையிறங்க உத்தரவிட்டனர். விமான நிலைய ஓடுபாதையில் தீயணைப்பு வண்டிகள் கொண்டு வந்து நிறுத்தப்பட்டன. அதிரடிப்படை மற்றும் ஆம்புலன்சுடன் மருத்துவ குழுவினர், விரைந்து வந்து தயார் நிலையில் இருந்தனர். அந்த  விமானம் அதிகாலை 2.20 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலைய ஓடுபாதையில் மிகவும் பத்திரமாக வந்து தரை  இறங்கியது பின்பு பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டு, விமான நிலைய ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டனர். தொடர்ந்து, விமான பொறியாளர்கள் விமானத்திற்குள் ஏறி பார்த்தனர்.

வால் பகுதியில் சரக்கு பார்சல்களில் இருந்து புகை வந்ததா என ஆய்வு செய்தனர். சரக்கு பார்சல்களில் இருந்து புகை எதுவும் வரவில்லை என்று தெரியவந்தது. விமானத்தில் தான் ஏதோ தொழில்நுட்ப கோளாறு என்று கண்டுபிடித்தனர். அதே விமானத்தை உடனடியாக பழுது பார்த்து இயக்க முடியாது என்பதால் மாற்று விமானத்தில் பயணிகளை குவைத்துக்கு அனுப்பிவைக்க இண்டிகோ ஏர்லைன்ஸ் அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி மாற்று விமானம் தயார் செய்யப்பட்டு அதிகாலை 4.30 மணியளவில் குவைத் புறப்பட்டுச் சென்றது.  இதனால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே சென்னையில் இருந்து குவைத் சென்றபோது விமானத்தில் புகை வந்து அவசரமாக தரை இறங்கிய சம்பவம் குறித்து டெல்லி (டிஜிசிஏ) டைரக்டர் ஜெனரல் ஆப் சிவில் ஏவியேஷன் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

Tags : passengers ,airport ,Chennai , Chennai, Kuwait, plane fire
× RELATED அதிக பயணிகளை கையாண்டதில் சென்னை விமான நிலையம் 3வது இடம்..!!