×

தமிழ்நாட்டுக்கு தனிக்கொடி வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை

சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:  இனி ஆண்டுதோறும் நவம்பர் முதல்நாள் தமிழ்நாடு நாள் என கொண்டாட தமிழ்நாடு அரசு முன்வந்திருப்பது பெருமகிழ்ச்சியை அளிக்கிறது. அண்டைமாநிலங்கள் ஏற்கனவே இந்நாளை அரசுவிழாவாகக் கொண்டாடி வருகின்றன என்பதை நாம் அறிவோம். கர்நாடகாவில் அம்மாநிலத்துக்கென தனிக்கொடியையும் பயன்படுத்துகின்றனர்.    ‘மதறாஸ் ப்ராவின்ஸ்’ என இருந்த பிரிட்டிஷ் இந்திய பகுதியிலிருந்து சில பகுதிகள் ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களோடு இணைக்கப்பட்டநிலையில் எஞ்சிய பகுதியே,  ‘மதறாஸ் ஸ்டேட்’ என்னும் பெயரில் தமிழ் மாநிலம் பிரிக்கப்பட்டது.  திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல்வர் அண்ணா தலைமையில் 1969 ஜனவரி 15 அன்று தமிழ்நாடு என தமிழர் நிலத்துக்குப் பெயர் சூட்டப்பட்டது. இந்நிலையில், ஜனவரி 15 அன்று தமிழ்நாடு நாள் என கொண்டாடுவதுதான் பொருத்தமானதாக இருக்கும்.  

 ‘தமிழ்நாடு நாள்’ கொண்டாடும் இந்நன்னாளில், சங்கரலிங்கனாரின் ஈகத்தையும் அண்ணா மற்றும் திமுகவின் பங்களிப்பையும், தமிழ்நாடு மீட்புக்களத்தில் தீவிரமாகப் பணியாற்றிய மபொசியின் பங்களிப்பையும் நினைவுக்கூர்வது ஒவ்வொரு தமிழனின் நன்றிக்கடன் ஆகும். மேலும், நமது மொழியையும், இனத்தையும், நிலத்தையும் மேம்படுத்துவதற்கு ஏதுவாக, சாதி, மத பிரிவினைவாதங்களிலிருந்து மீண்டெழும் தமிழ்த்தேசியத்தை வளர்த்தெடுக்கும் வகையில் இதனை முன்னெடுக்க ஜனநாயக சக்திகள் அனைவரும் உறுதியேற்போம். தமிழ்நாடு நாள் கொண்டாடும் இந்தவேளையில், தமிழ்நாட்டுக்கென தனியே ‘மாநிலக்கொடி’ ஒன்றை உருவாக்க வேண்டும்.


Tags : Tamil Nadu Thirumavalavan ,Tamil Nadu , Tamil Nadu, Thirumavalvan
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து