×

அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டில் பிற பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீடு: மத்திய சுகாதாரத்துறைக்கு அன்புமணி கடிதம்

சென்னை: பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு, எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய சுகாதாரத்துறை நிறுவனங்களின் விசித்திரமான நிலைப்பாடு காரணமாக பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைக்க வேண்டிய 2430 மருத்துவ மேற்படிப்பு இடங்களும், 183 பல்மருத்துவ மேற்படிப்பு இடங்களும் பறிக்கப்படுகின்றன. இளநிலை மருத்துவப்படிப்பு, இளநிலை பல்மருத்துவப் படிப்பு ஆகியவற்றுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களிலும் இதே அநீதி இழைக்கப்படுகிறது. மத்திய கல்வி நிறுவனங்களில் மட்டுமின்றி, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களிலும் பட்டியல் இனத்தவருக்கு 15%, பழங்குடியினருக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்படுவதைப் போன்று பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கும் 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். ஆனால், மத்திய கல்வி நிறுவனங்கள் (மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு) சட்டத்தின்படி மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் மட்டும்தான் இடஒதுக்கீடு வழங்க முடியும் என்று கூறி அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு இடஒதுக்கீடு வழங்க இயலாது என்று மத்திய அரசு கூறுவதை ஏற்க முடியாது.

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த திருத்தங்களின்படி, மாநில அரசுகளுக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவ மற்றும் பல் மருத்துவ மேற்படிப்பு இடங்களில் 50% இடங்கள் அகில இந்திய தொகுப்புக்கு பெறப்படுகிறது. இதனால், மாநில அரசுகளால் உள்ளூர் மாணவர்களுக்கு உரிய அளவில் வாய்ப்பு வழங்க முடியவில்லை. இந்த இடங்கள் தமிழக அரசின் கட்டுப்பாட்டிலேயே இருந்தால், அவற்றில் 50%, அதாவது 440 இடங்கள் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைத்திருக்கும். ஆனால், அந்த இடங்கள் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்பட்ட ஒரே காரணத்திற்காக இடஒதுக்கீட்டை மறுப்பது நியாயமல்ல. எனவே, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

Tags : India Medicaid Allocation , All India Medical Provision, Central Health Department, Anumani, Letter
× RELATED அதிமுகவை கைப்பற்ற சசிகலா அதிரடி...