×

போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் பெயர்கள் பயோ மெட்ரிக்கில் நீக்கம்: பெரியார் பல்கலை. நிர்வாகம் அதிரடி

ஓமலூர்: சேலம் பெரியார் பல்கலைக்கழக ஊழியர்கள் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, ஊழியர்கள் 3வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே,  போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களின் பெயர்கள் பயோமெட்ரிக்கில் இருந்து நீக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சேலம் பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கம் மற்றும் நிர்வாக பணியாளர்கள் சங்கத்தின் சார்பில், பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்கலைக்கழக  தொகுப்பூதிய பணியாளர்களுக்கு ஊதியத்தை மாதக்கணக்கில் கணக்கிட்டு வழங்க வேண்டும். 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் தினக்கூலி பணியாளர்களை தொகுப்பூதிய பணியாளர்களாக உயர்த்த  வேண்டும். பணி நேரத்தை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டங்கள் குறித்து பேட்டியளித்த நிர்வாக பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் 4 பேரை, பல்கலைக்கழக (பொ) பதிவாளர் தங்கவேல் பணியிடை நீக்கம் செய்துள்ளார். இந்த உத்தரவை திரும்ப பெற  வலியுறுத்தியும், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், பெண்கள் உட்பட அனைத்து ஊழியர்களும் 2ம் நாளாக நேற்று முன்தினம் இரவும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பெண்கள்  கைக்குழந்தைகளுடன் பங்கேற்றனர்.  பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில், எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்ட பின்பும், பல்கலைக்கழக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பணியாளர்கள், வருகைப்பதிவு செய்து விட்டு, பணி செய்யாமல் போராட்டத்தில் கலந்து கொண்டால் ஊதியம் வழங்கப்படாது. வரும் 4ம் தேதிக்குள் பணிக்கு திரும்பாவிட்டால், அனைவரும் முன்னறிவிப்பு  இல்லாமல் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில், தொடர்ந்து 3வது நாளாக நேற்றும் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, வருகை பதிவு செய்து விட்டு, போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பெயர்கள், வருகை பதிவுக்கான  பயோமெட்ரிக்கிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Periyar University ,strike , போராட்டம், ஊழியர்கள் பெயர்கள்,பெரியார் பல்கலை
× RELATED ஊழல் பல்கலைக்கழகங்களும்… கைதாகும்...