×

ஓய்ந்தது மழை; நீங்கியது தடை களைகட்டியது கொடைக்கானல்: சுற்றுலாப்பயணிகள் உற்சாகம்

கொடைக்கானல்: கொடைக்கானலில் மழை குறைந்ததால் சுற்றுலாத்தலங்கள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டன. இதனால் சுற்றுலாப்பயணிகள் ஆர்வமுடன் இயற்கை அழகை ரசித்து  வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக தொடர்ச்சியாக கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டும், மரங்கள் விழுந்தும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  மின்கம்பங்கள் சாய்ந்து சில இடங்களில் மின்விநியோகம் தடைபட்டது. தற்போது இதன் சீரமைப்பு பணிகள் பாதிக்கு மேல் முடிந்துள்ளன.  கனமழை காரணமாக கொடைக்கானல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மோயர் பாயிண்ட், பேரிஜம் ஏரி, தூண்பாறை, பைன் பாரஸ்ட், குணா குகை, மன்னவனூர் ஏரி ஆகிய இடங்கள் செல்ல சுற்றுலாப்  பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

 இந்நிலையில், கொடைக்காலில் நேற்று மழை இல்லாத காரணத்தினால் கடந்த சில நாட்களாக விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கி கொள்ளப்பட்டது.  இதைத் தொடர்ந்து கொடைக்கானலில் மூடப்பட்ட சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் திறக்கப்பட்டன. சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் பல்வேறு இடங்களுக்கு சென்று இயற்கை அழகை ரசித்தனர்.  நட்சத்திர ஏரியில் நிறுத்தப்பட்டிருந்த படகு சவாரியும் துவங்கியது. மழையால் கடந்த 2 நாட்களாக விடுமுறை விடப்பட்ட கொடைக்கானல் பள்ளி, கல்லூரிகள் நேற்று வழக்கம்போல் திறக்கப்பட்டு இயங்கின.



Tags : Kodaikanal , Rain, Kodaikanal, tourists
× RELATED கொடைக்கானலில் வறண்ட முகம் காட்டும்...