×

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் வேலூர் மாணவருக்கு நிபந்தனை ஜாமீன்

மதுரை:  நீட் தேர்வில் நடந்த ஆள்மாறாட்ட மோசடி வழக்கில் கைதான வேலூர் மாணவருக்கு ஐகோர்ட் கிளை நிபந்தனை ஜாமீன் வழங்கியது. மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் உதித்சூர்யா பிடிபட்டார். இதைத்தொடர்ந்து உதித்சூர்யா, அவரது தந்தை  வெங்கடேசன் மற்றும் சென்னையை சேர்ந்த தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பிரவீன் (21), இவரது தந்தை சரவணன் (44), ராகுல் (20), இவரது தந்தை டேவிட் (47) மற்றும் தர்மபுரி  மாவட்டம், கடகத்தூர் அருகே உள்ள மூங்கிலான்கோட்டையை சேர்ந்த மாணவி பிரியங்கா, இவரது தாய் மைனாவதி, வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த மாணவர் முகமது இர்பான், இவரது தந்தை முகமது சபி  ஜான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் மாணவர்களான உதித்சூர்யா, ராகுல் மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு ஐகோர்ட் மதுரை கிளை ஜாமீன் வழங்கியது. இதைத்தொடர்ந்து, மற்றொரு மாணவரான முகமது இர்பானின் ஜாமீன் மனு, நீதிபதி  ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அரசு வக்கீல் ராபின்சன் ஆஜராகி, ‘‘தேர்வு நடந்த காலகட்டத்தில் மனுதாரர் மொரிஷியஸ் நாட்டில் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவரது பெயரில் 3 இடங்களில் தேர்வு எழுதப்பட்டுள்ளது. இதில்,  அதிகபட்ச மதிப்பெண் பெற்ற இடத்தை கணக்கிட்டு சீட் பெற்றுள்ளனர். எனவே, முழு விசாரணை செய்ய வேண்டியது அவசியம்’’ என்றார்.  அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘‘இதே வழக்கில் இர்பானின் தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளார். ஏன் அவருக்கும் சேர்த்து ஜாமீன் மனு செய்யாமல், மாணவருக்கு மட்டும் தனியாக ஜாமீன் கேட்கிறீர்கள்’’  என்றார். இதையடுத்து மனுதாரர் தரப்பில் அவரது தந்தைக்கும் இதே நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு செய்யப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மாணவர் இர்பானுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினார். அவர், மறு உத்தரவு வரும் வரை மதுரையில் உள்ள சிபிசிஐடி டிஎஸ்பி அலுவலகத்தில் தினசரி ஆஜராகி கையெழுத்திட  வேண்டும் என நிபந்தனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags : Vellore ,student , Need, impersonation case, Vellore student
× RELATED குடிபோதையில் ரகளை செய்ததால்...