×

ஆழ்துளை குழாயில் விழுந்து உயிரிழந்த சுஜித் பெற்றோருக்கு 10 லட்சம்: கலெக்டர் வழங்கினார்

மணப்பாறை: மணப்பாறை அருகே ஆழ்துளை குழாயில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித் பெற்றோருக்கு அரசு நிவாரணம் 10 லட்சத்தை கலெக்டர் சிவராசு நேற்று வழங்கினார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் கடந்த 25ம்தேதி பிரிட்டோ ஆரோக்கியதாஸ்-கலாமேரியின் 2 வயது குழந்தை சுஜித் ஆழ்துளை குழாயில் விழுந்து உயிரிழந்தான். சிறுவனின்  பெற்றோருக்கு ஆறுதல் கூறிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக மற்றும் அரசு சார்பில் தலா 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். இதையடுத்து அரசின் நிவாரண தொகையை  உடனடியாக வழங்க திருச்சி மாவட்ட கலெக்டருக்கு முதல்வர் உத்தரவிட்டார்.  அதன்படி நேற்று, கலெக்டர் சிவராசு அரசின் நிவாரண நிதி 10 லட்சத்தை சுஜித்தின் பெற்றோரிடம் நேரில் சென்று வழங்கினார். திட்ட இயக்குனர் சங்கர், ரங்கம் சப்-கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆகியோர்  உடனிருந்தனர்.

அப்போது சுஜித்தின் பெற்றோர், அரசு வேலை வழங்கும்படி கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர். சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் காலிப்பணியிடம் இருந்தால் பரிசீலிப்பதாக உறுதி அளித்தார். இதன்பின், கலெக்டர் அளித்த பேட்டி:  முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து 10 லட்சம் சுஜித் ெபற்றோருக்கு வழங்கப்பட்டது. குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் 2நாளில் கிடைத்து விடும். குழந்தையின் முக்கிய உறுப்புகள் டிஎன்ஏ  பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. குழந்தை உடலை மீட்கப்படவில்லை என்ற வதந்தியை நம்ப வேண்டாம்.  இவ்வாறு அவர் கூறினார்.

Tags : parents ,Sujith , Sujith, who died of deep pipe, 10 lakhs
× RELATED விகேபுரம் அருகே ரேஷன் அரிசி கடத்தியவர் கைது