×

சிபிசிஐடி ஆவணங்கள் சரியில்லாததால் பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் 2 பேர் மீதான குண்டாஸ் ரத்து: ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை:   பொள்ளாச்சியில் கடந்த ஆண்டு பல பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாகினர். இந்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் பரவி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இதையடுத்து, பாதிக்கப்பட்ட ஒரு பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருநாவுக்கரசு, சபரிராஜன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து அவர்கள் மீது பாலியல் பலாத்காரம் செய்தல்,  மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.  இதையடுத்து, திருநாவுக்கரசு, சபரிராஜன் உள்ளிட்டோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து கோவை மாவட்ட கலெக்டர் கடந்த மார்ச் மாதம்  உத்தரவு பிறப்பித்தார்.  இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி திருநாவுக்கரசின் தாய் பரிமளா, சபரிராஜன் தாய் லதா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

அவர்கள் தாக்கல் செய்த மனுக்களில், பாலியல் வன்கொடுமை வழக்கை உரிய சட்டத்தின் கீழ்தான் விசாரிக்க வேண்டும். குண்டர் சட்டத்தின் கீழ் அடைத்து பிறப்பித்த உத்தரவை குடும்பத்தினருக்கு முறையாக  தெரிவிக்கவில்லை. எனவே, குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைத்த கோவை கலெக்டரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.எம்.டி.டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,  குண்டர் சட்டத்தில் அடைத்து பிறப்பித்த உத்தரவு  தொடர்பான ஆவணங்கள் உறவினர்களுக்கு முறையாக வழங்கப்படவில்லை. சிபிசிஐடி போலீசாரின்ஆவணங்கள் தெளிவில்லாமல் உள்ளது. எனவே, திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகியோரை குண்டர் தடுப்பு  சட்டத்தில் கைது செய்த கோவை கலெக்டரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று தீர்ப்பளித்தனர்.

திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேரின் காவல் நீட்டிப்பு
பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் சிறையில் உள்ள திருநாவுக்கரசு  உள்ளிட்ட 5 பேரின் காவலை நீடித்து கோவை கோர்ட் உத்தரவிட்டது. பொள்ளாச்சியில் மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்து படம் எடுத்து மிரட்டிய வழக்கில் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த சபரிராஜன் (25), சதீஸ்(28), வசந்தகுமார்(24), திருநாவுக்கரசு(27), மணிவண்ணன்  ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையே இவ்வழக்கு சிபிசிஐடியில் இருந்து சிபிஐக்கு மாற்றப்பட்டது.  கைதான 5 பேரும் கோவை  மத்திய சிறையில் இருந்து சேலம் சிறைக்கு மாற்றப்பட்டனர். அவர்களின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்தது. எனவே அவர்கள் நேற்று சேலம் சிறையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் சி.ஜே.எம்.  கோர்ட்டில் நீதிபதி ரவி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களின் நீதிமன்ற காவலை வரும் 16ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags : Candidate ,sex offenders ,Pollachi ,persons ,CBCID ,CECID , CBCID Documents, Pollachi Sex Offenders, Kundas, Icort
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!