×

ஜிஎஸ்டி மோசடியில் சிக்கிய ஈரோடு கட்டுமான நிறுவனத்தில் ஐ.டி. மீண்டும் சோதனை

ஈரோடு: ஜிஎஸ்டி மோசடியில் சிக்கிய ஈரோட்டை சேர்ந்த கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் நேற்று சோதனை நடத்தினர். ஈரோட்டை தலைமையிடமாகக்கொண்டு அன்னை இன்ஃப்ரா டெவலப்பர்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் நிர்வாக இயக்குநர் அசோக் (45). இந்த நிறுவனம் மத்திய, மாநில அரசுகளின் உள்கட்டமைப்பு  பணிகளை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து செய்து வருகிறது. இந் நிறுவனத்தின் கிளைகள் தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, தெலங்கானா போன்ற மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அசோக், அரசு ஒப்பந்த பணிகளுக்கு  உண்மையான திட்ட மதிப்பீட்டை மறைத்து போலியான ஆவணங்கள் தயாரித்து பல கோடி ரூபாய் மோசடி செய்து வந்ததாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக, ஆந்திர மாநில ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவினர் அன்னை இன்ஃப்ரா டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் தமிழகம் உள்பட 3 மாநில கிளைகளிலும் கடந்த மாதம் அதிரடி சோதனை நடத்தினர். இதில்,  போலியாக ₹450 கோடிக்கு இன்வாய்ஸ் தயாரித்து, அதன்மூலம், ₹67 கோடி வரை வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ஜிஎஸ்டி நுண்ணறிவு இணை இயக்குநர் மயன்க் சர்மா உத்தரவின்பேரில் அசோக் மீது ஜிஎஸ்டி மோசடி தொடர்பாக பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு  செய்து கடந்த மாதம் 16ம் தேதி கைது செய்தனர். இந்நிலையில், நேற்று காலை ஈரோடு, கோவை வருமான வரித்துறை அதிகாரிகள் 10க்கும் மேற்பட்டோர் ஈரோடு, பெருந்துறை சாலையில் உள்ள அன்னை இன்ஃப்ரா டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் தலைமை  அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு அதிரடி சோதனை நடத்தினர். இதேபோல கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிர்வாக இயக்குநர் அசோக்குமாருக்கு சொந்தமாக பெருந்துறையில் உள்ள வீட்டிலும்  சோதனை நடந்தது. இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

Tags : IT company , GST Fraud, Erode, Tax Department Officers
× RELATED மாற்றுத்திறன் பெண்ணிடம் சில்மிஷம் ஐடி நிறுவன ஊழியர் கைது