×

முதல்வர் பதவி கேட்டு சிவசேனா தொடர்ந்து பிடிவாதம் ஆட்சி அமைக்க முடியாமல் பாஜ திணறல்

* மகாராஷ்டிராவில் காங்கிரஸ் ஆதரவுடன் புதிய கூட்டணி  ஆட்சி உருவாகுமா?

மும்பை : முதல்வர் பதவி கேட்டு சிவசேனா தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வருவதால், சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்கள் ஆகியும் மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க முடியாமல் பா.ஜனதா கட்சி திணறி வருகிறது.  மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜனதாவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் கிடைத்தன. ஆட்சியமைக்க இந்த கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் உள்ள போதிலும், சிவசேனாவின் நிலைப்பாட்டால் மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைவதில் இழுபறி நீடித்து வருகிறது. இரண்டரை ஆண்டுகளுக்கு சுழற்சி முறையில் இருகட்சிகளுக்கும் முதல்வர் பதவி, அமைச்சரவையில் சமபங்கு ஆகிய கோரிக்கையை சிவசேனா திடமாக வலியுறுத்தி வருகிறது. ஆனால், இதை ஏற்க பா.ஜனதா மறுத்து விட்டது. சிவசேனாவுக்கு துணை முதல்வர் பதவியுடன், 15 அமைச்சர் பதவிகள் ஒதுக்க தயாராக இருப்பதாக பா.ஜனதா தரப்பில் தெரிவிக்கப்பட்ட திட்டத்தையும் சிவசேனா ஏற்க மறுத்து விட்டது. இந்த நிலையில், பா.ஜனதாவை கழற்றி விட்டுவிட்டு தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன் புதிய அரசு அமைப்பதற்கான முயற்சியில் சிவசேனா ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக சிவசேனா மூத்த தலைவர்களில் ஒருவரும் உத்தவ் தாக்கரேயின் நம்பிக்கைக்குரியவருமான சஞ்சய் ராவுத் நேற்று முன்தினம் மாலை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் போது பா.ஜனதாவுக்கு மாற்றாக சிவசேனா தலைமையில் புதிய கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிவசேனாவின் இந்த முயற்சிக்கு மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் பாலாசாகேப் தோரத், முன்னாள் முதல்வர்கள் அசோக் சவான், பிருத்விராஜ் சவான் போன்ற தலைவர்களும் சாதகமாக இருப்பதாக கூறப்படுகிறது. சிவசேனாவின் திட்டம் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்து ஆலோசனை நடத்துவதற்காக பாலாசாகேப் தோரத் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தற்போது டெல்லியில் முகாமிட்டுள்ளனர். ஏற்கனவே சிவசேனா மீது சரத் பவார் மென்மையான போக்கை கொண்டிருக்கிறார் என்பதால் சிவசேனாவுக்கு ஆதரவளிக்க அவரது கட்சி தயாராக இருப்பதாகவே கருதப்படுகிறது. ஆனால், தேசியவாத காங்கிரசுக்கு 54 எம்.எல்.ஏ.க்களே உள்ளனர். சிவசேனாவுக்கு 56 எம்.எல்.ஏ.க்களும் அந்த கட்சியை ஆதரிக்கும் 7 சுயேச்சைகளும் உள்ளனர். அந்த வகையில் தேசியவாத காங்கிரசின் ஆதரவு கிடைத்தாலும் சிவசேனா கூட்டணியின் பலம் 117 ஆகத்தான் இருக்கும். இதனால், 44 எம்.எல்.ஏ.க்களை வைத்திருக்கும் காங்கிரசின் ஆதரவை பெற்றால்தான் சிவசேனாவால் ஆட்சியமைக்க முடியும்.

இந்த நிலையில்தான் சரத் பவாரை சஞ்சய் ராவுத் சந்தித்து பேசியிருக்கிறார். சரத் பவார் மூலம் சோனியா காந்தியிடம் பேசி காங்கிரசின் ஆதரவை பெற சிவசேனா முயற்சித்து வருகிறது. இந்த முயற்சிக்கு மகாராஷ்டிரா காங்கிரசின் மூத்த தலைவர்களின் ஆதரவும் இருப்பதால் மகாராஷ்டிராவில் காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனா தலைமையில் புதிய அரசு அமையுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. காங்கிரசில் எதிர்ப்பு: சிவசேனா தலைமையில் புதிய ஆட்சியமைய காங்கிரஸ் ஆதரவளிக்க மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான சுஷில்குமார் ஷிண்டே, மும்பை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சஞ்சய் நிரூபம் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சுஷில்குமார் ஷிண்டே நேற்று கூறுகையில், ‘‘மக்கள் அளித்த தீர்ப்புக்கு மரியாதை அளித்து எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து பணியாற்ற காங்கிரஸ் தயாராக உள்ளது. சிவசேனாவுக்கு ஆதரவளிக்கும் எந்த முடிவையும் காங்கிரஸ் தலைமை எடுக்காது என்று நம்புகிறேன்’’ என்றார். சஞ்சய் நிரூபம் கூறுகையில், ‘‘பா.ஜனதாவும் சிவசேனாவும் பொய்யான ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகின்றன. ஆசை வார்த்தைக்கு காங்கிரஸ் மயங்கி விடக்கூடாது’’ என்றார். அடுத்தடுத்த திருப்பங்களால் மகாராஷ்டிர அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சிவசேனாவை விட்டால் பாஜவுக்கு வழியில்லை; சிவசேனாவை உடைக்க வேண்டும்; இல்லாவிட்டால் பணிந்து போக வேண்டும் என்ற நிலையால் ஆட்சி அமைக்க முடியாமல் பாஜ திணறி வருகிறது. ஓரிரு நாளில் இழுபறிக்கு முடிவு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5ம் தேதி பட்நவிஸ் பதவியேற்பு?

சிவசேனாவின் ஆதரவு இல்லாமலேயே சிறுபான்மை அரசு அமைக்க பா.ஜனதா திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. 105 உறுப்பினர்களை கொண்ட பா.ஜனதாவுக்கு இதுவரை 8 சுயேச்சைகள் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் 7 சுயேச்சைகள் தங்களுடன் தொடர்பில் இருப்பதாக பா.ஜனதா கூறி வருகிறது. பட்நவிஸ் தலைமையில் அரசு பதவியேற்ற பிறகு சிவசேனா மற்றும் பிற கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களுக்கு வலைவீசி அவர்களை தன்பக்கம் இழுக்க பா.ஜனதா முயற்சி மேற்கொண்டுள்ளது. பதவியேற்புக்காக 5ம் தேதிக்கு வாங்கடே மைதானம் பா.ஜனதா சார்பில் புக் செய்யப்பட்டுள்ளது.

Tags : resignation ,Chief Minister ,Shiv Sena , Shiv Sena's resignation, Chief Minister's post ,stubborn regime
× RELATED நாகப்பட்டினம் சில்லடி தர்கா கடற்கரையில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை