×

பல்கலை வித்தகர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது : காங். எம்பி வலியுறுத்தல்

பெங்களூரு : ‘திமுக முன்னாள் தலைவர் மு.கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும்,’ என்று காங்கிரஸ் எம்பி. ஹரிபிரசாத் வலியுறுத்தினார். கர்நாடக  மாநில திமுக சார்பில், பெங்களூரு ராமச்சந்திரபுரத்தில் உள்ள மாநில திமுக  அலுவலகமான கலைஞரகத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் சிலை திறப்பு விழா நேற்று நடந்தது. மாநில  கழக அமைப்பாளர் ந.ராமசாமி தலைமை தாங்கினார். கருணாநிதியின் சிலையை மாநிலங்களவை திமுக எம்பி.யான ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதியும், கர்நாடகாவை சேர்ந்த மாநிலங்களவை காங்கிரஸ் எம்பி.யான   பி.கே.ஹரிபிரசாத்தும் திறந்து வைத்தனர். பின்னர், விழாவில்  ஹரிபிரசாத்  பேசுகையில், ‘‘ திராவிட மொழி பேசும் மக்களின் உரிமைக்காக 80 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி,  உண்மையான சமூகநீதியை நிலை நாட்ட, தன்னை முழுமையாக  அர்ப்பணித்து கொண்டவர்கருணாநிதி.. அவர் சிறந்த அரசியல்வாதியாக  மட்டுமின்றி, சிறந்த எழுத்தாளர், பேச்சாளர், கவிஞர், சிந்தனையாளர்,  பாடலாசிரியர், திரைப்பட வசன கர்த்தா, நாடக கலைஞர் என பல்கலை வித்தகராக  திகழ்ந்தார். நாட்டின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ யார்  யாருக்கோ வழங்கப்படுகிறது. ஆனால், அந்த விருதுக்கு உண்மையில் தகுதியானவர்  கருணாநிதி மட்டுமே. அவருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க  வேண்டும்,’’ என்றார்.

ஆலந்தூர் பாரதி பேசுகையில், ‘‘ தான் மறைந்தபின், சென்னை  மெரினா கடலோரத்தில் பேரறிஞர் அண்ணாவின் காலடியில் அடக்கம் செய்ய வேண்டும்  என்று கருணாநிதி கூறியதை செயல்படுத்த முயற்சித்தபோது, தமிழகத்தில் ஆளும்  அதிமுக அரசு பலவழிகளில் தடுத்து நிறுத்தியது. அப்போது, கர்நாடகாவை சேர்ந்த நீதிபதி ஹுலுவாடி ரமேஷ்  பிறப்பித்த உத்தரவு தான் கருணாநிதியின் விருப்பத்தை நிறைவேற்றியது. அதற்காக  அவருக்கு திமுக சார்பில் நன்றி கூறுகிறேன்,’’ என்றார்.

Tags : scholar ,University ,Karunanidhi ,Karunanidhi: Cong ,MB , Bharat Ratna award ,University scholar Karunanidhi
× RELATED ஏழை எளிய மாணவர்களுக்கு சென்னை...