×

சோமசீலா அணை நிரம்பியதால் சென்னைக்கு மேலும் 2 டிஎம்சி தண்ணீர் : ஆந்திர அரசு முடிவு

திருமலை: சோமசீலா அணை நிரம்பியதால் சென்னைக்கு கூடுதலாக 2 டிஎம்சி தண்ணீர் வழங்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளதாக முதன்மை பொறியாளர் முரளிதர்நாத் தெரிவித்தார். ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், சோமசீலாவில் உள்ள அணையில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் அதன் கொள்ளளவான 78 டிஎம்சி தண்ணீர் நிரம்பியுள்ளது. இதனால் பென்னா நதி வழியாக கண்டலேறு அணைக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.
தொடர்ந்து கண்டலேறுக்கு நீர்வரத்து அதிகரித்து கொண்டே வரும் நிலையில் கண்டலேறு அணையில் இருந்து 8.50 லட்சம் ஏக்கர் விவசாயத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட உள்ளதாக முதன்மைப் பொறியாளர் முரளிதர்நாத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

சோமசீலா அணைக்கு கடந்த 10 ஆண்டுகளில் போதிய மழை இல்லாததால் பென்னா நிதி வறண்டு நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. இந்நிலையில் 2007ம் ஆண்டு 70 டிஎம்சி நிரம்பிய நிலையில் 2010ம் ஆண்டு 73 டிஎம்சி நிரம்பியது. அதன்பிறகு தற்போது முதல்முறையாக அணையின் முழு கொள்ளளவான 78 டிஎம்சி தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து சோமசீலா அணைக்கு 29 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் 12 மதகுகள் வழியாக பென்னா நதிக்கு  தண்ணீர் திறந்து விடப்பட்டு கண்டலேறு அணைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதனால் கண்டலேறு அணை நீர்வரத்து அதிகரித்து கொண்டே உள்ளது. ஏற்கனவே  சென்னைக்கு 2 டிஎம்சி தண்ணீர் வழங்கப்பட்ட நிலையில் கூடுதலாக 2 டிஎம்சி தண்ணீர் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Somaseela Dam ,Chennai Somaseela Dam , Somaseela Dam, 2 more TMC water,Chennai
× RELATED சென்னை மக்களின் குடிநீர் தேவையை...